×

17 வயது சிறுவன் உள்பட டெல்லியில் 24 மணி நேரத்தில் 3 கொலை

புதுடெல்லி: டெல்லியில் 24 மணி நேரத்தில் 3 படுகொலை சம்பவங்கள் அரங்கேறின. இது மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முதல் சம்பவம் மத்திய டெல்லியில் உள்ள நபி கரீம் பகுதியில் நடந்தது. அங்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 34 வயதான மகேந்திரா என்கிற இளைஞர் முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இதில் அவருக்கும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்களான லக்கி மற்றும் சாகர் ஆகியோருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த லக்கி மற்றும் சாகர் கூர்மையான ஆயுதத்தால் மகேந்திராவை சரமாரியாக குத்தி கொலை செய்தனர். மத்திய டெல்லியின் பஞ்சாபி பஸ்தியில் 2-வது சம்பவம் நடந்தது. அங்கு ஆஷிஷ் ஆனந்த் (24) என்பவரின் வீட்டின் முன்பு 4-5 பேரை கொண்ட ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தது. அதை தட்டிக்கேட்ட ஆஷிஷ் ஆனந்தை அந்த கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்தது. முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு தனது மகனை கொலை செய்ததாக ஆஷிஷ் ஆனந்தின் தாய் கூறினார்.

3-வது கொலை சம்பவம் வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் பகுதியில் நடந்தது. அங்கு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த குணால் என்கிற 17 வயது சிறுவனை மர்ம கும்பல் ஒன்று கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிய சிறுவனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். இந்த 3 சம்பவங்கள் குறித்து போலீஸ் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

The post 17 வயது சிறுவன் உள்பட டெல்லியில் 24 மணி நேரத்தில் 3 கொலை appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Nabi Karim ,central Delhi ,
× RELATED குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி