×

விஜயிடமிருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்கவேண்டும்: அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் பரபரப்பு

சென்னை: ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இஸ்லாமிய அமைப்பு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ரமலான் நோன்பையொட்டி நடிகர் விஜய் கடந்த மார்ச் 7ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் அதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழுகையிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து விஜய்யை ஆதரித்தும் விமர்சித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பு விஜய்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் விஜய், தனது சினிமா பிரபலத்தை அரசியலுக்கு பயன்படுத்த முயல்கிறார். திரைத்துறைப் பயணத்தில் தனது படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தவர் விஜய். இதனால், அவரோடு இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்துவந்து அதனை அவமதித்து பாவம் செய்துவிட்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க தவெக சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் சட்டமாக நிறைவேறியபோது விஜய் அதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு, மாநிலம் முழுவதும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார் விஜய். இப்படியாக இஸ்லாமியர்கள் விவகாரத்தில் விஜய் தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், அவருக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி கண்டனம் தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

The post விஜயிடமிருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்கவேண்டும்: அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil ,India Muslim Jamaat ,Chennai ,Islamic Organization ,Vijay ,Tamil Nadu Victory Club ,Ramadan ,RAMALAN NONBAYOTTI ,YMCA STADIUM ,Tamil Nadu Islamists ,All India Muslim Jamaat ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...