×

திருப்பூர் பல்லடத்தில் திமுக மகளிர் அணி மாநாடு; 2 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சிறப்புரை

திருப்பூர்: பல்லடத்தில் இன்று மாலை நடைபெறும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். மாநாட்டில் திமுக மகளிரணியினர், பெண்கள் என 2 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு பாடல் நிகழ்ச்சி, சிலம்பாட்டம், பறையாட்டத்துடன் தொடங்குகிறது. மாநாட்டுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இதற்காக முதல்வர் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கலெக்டர், போலீஸ் உயரதிகாரிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் காரில் புறப்பட்டு அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து காரில் மாலை 4 மணிக்கு பல்லடம் புறப்பட்டு சென்றார். மாநாட்டுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்பிக்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மேற்கு மண்டல பொறுப்பாளரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி வரவேற்று பேசுகிறார். மாநாட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ நன்றி கூறுகிறார்.மாநாட்டில் திமுக ஆட்சியில் மகளிருக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பார்வையிடுகின்றனர். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மகளிர் உரிமை தொகை, கட்டணமில்லா விடியல் பயணம், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தோழி விடுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றியும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டில் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர். இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியில் இருந்தும் தலா 15 பேர் வீதம் மொத்தம் 12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடிகளில் இருந்து மகளிர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை முதலே மகளிரணி ெதாண்டர்கள் வந்து குவியத் தொடங்கினர். மாநாட்டில் சுமார் 2 லட்சம் மகளிரணி தொண்டர்கள், பெண்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டுக்காக காரணம்பேட்டையில் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானம் தயார்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பிரமாண்ட மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் சிவப்பு நிற தரை விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் மகளிருக்காக 300க்கும் மேற்பட்ட தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், சிற்றுண்டி வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டு திடல் முழுவதும் திமுக கொடிக்கம்பங்கள், மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 31 இடங்களில் 140 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags : DIMUKA ,THIRUPPUR BALLADATA ,M.U. K. Stalin ,Tiruppur ,Chief Minister ,MLA ,Winning Tamil Women ,Pallada ,K. Stalin ,Goai-Trichy National Highway ,Tiruppur District ,Balladam ,
× RELATED பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு