தஞ்சாவூர், ஏப்17: தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல் செய்யப் பட உள்ளதாக வேளாண் விற்பனைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நடப்பு 2025-26-ம் ஆண்டு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்குட்பட்ட தஞ்சை விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக உளுந்து 2,550 டன் மற்றும் பச்சைப்பயறு 60 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு விளைபொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரிதரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து எடுத்து வர வேண்டும். ஈரப்பதம் 12சதவீதம், இதர பொருட்கள் கலப்பு 2சதவீதம், இதர தானியங்கள் கலப்பு 3சதவீதம், சேதமடைந்த பயறுகள் 3சதவீதம், சிறிதளவு சேதமடைந்த பயறுகள் 4சதவீதம், முதிர்வு பயறுகள் 3சதவீதம், வண்டுகள் தாக்கிய பயறுகள் 4சதவீதம் இருக்குமாறு நன்கு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு நன்கு உலரவைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.74 எனற வீதத்திலும் பச்சைப்பயறு கிலோ ஒன்றிற்கு ரூ.86.82 என்ற வீதத்திலும் கொள்முதல் செய்யப்படும். விளை பொருட்களுக்கான கிரயத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் 1-4-2025 முதல் 29-6-2025 முடிய 90 நாட்களுக்கு உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சை, கும்பகோணம், பாப நாசம் மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து மற்றும் பச்சைப்பயறு விற்பனை செய்து பயனடையலாம். இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தஞ்சை வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சரசு தெரிவித்துள்ளார்.
The post ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல் appeared first on Dinakaran.
