
சென்னை: மாநில உரிமையை காப்பத்தில், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வெற்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம், மாநில சுயாட்சி தொடர்பாக நேற்று முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்து முதல்வரை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார். அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை என கமல்ஹாசன் கூறினார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது: ராஜ்யசபா சீட்டுக்கு நன்றி சொல்ல வந்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு வரவில்லை. ராஜ்யசபா எம்.பி. யார் என கட்சியில் முடிவு செய்த பிறகு அப்பொழுது நன்றி சொல்ல வருவோம். இப்போது நன்றி சொல்ல அல்ல, கொண்டாட வந்தோம். ஆளுநர் விஷயத்தில் வந்த தீர்ப்பு நமக்கு சாதகமான தீர்ப்பு என்று சொல்வதை விட இந்தியாவிற்கே சாதகமான ஒரு தீர்ப்பை தமிழக அரசு போட்ட வழக்கினால் வந்திருப்பது என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.
The post உரிமையை காப்பதிலும், சுயாட்சியை வலியுறுத்துவதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாக திகழ்கிறார் முதல்வர்: கமல்ஹாசன் பாராட்டு appeared first on Dinakaran.
