×

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெறும் சாதி பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உதரவிட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், சங்கத்தின் பெயரில் உள்ள சாதி பெயரை நீக்கி சங்க சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அணுக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

மேலும், தீர்ப்பில், சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என்று அனைத்து பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். சங்கங்களின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கி சட்ட திட்டங்களின் திருத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என்று அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும்.சாதி சங்கங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயரை நீக்கி, சங்க சட்டத்திட்டத்தில் திருத்தங்கள் செய்யும் பணிகளை 3 மாதங்களுக்குள் தொடங்கி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஜாதி சங்கங்கள் நடத்தும் பள்ளி கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் பெயர் பலகைகளில் சாதிப் பெயர்கள் இடம் பெறக்கூடாது.

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அரசு பள்ளி என்று பெயர் சூட்ட வேண்டும். பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும். அவர்களின் சாதி பெயர் இருக்கக் கூடாது. வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற காரணத்திற்காக குழந்தைகளை பெற்றோரே கொலை செய்யும் ஆணவ கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. சாதி கயிறு கட்டிக் கொண்டு அரிவாளுடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து தாக்குதல்கள் நடத்துவதாலும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.

The post கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெறும் சாதி பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Tamil Nadu government ,Chennai ,Chennai High Court ,South Indian Vertical Mahajana Society ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...