×

சுங்கச்சாவடியில் நிற்க தேவையில்லை சாட்டிலைட் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்: 2 வாரங்களில் அமல்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

புதுடெல்லி: சாட்டிலைட் அடிப்படையிலான சுங்கக்கட்டண முறை 2 வாரங்களில் அமலுக்கு வர உள்ளது என்றும் அதனால் இனிமேல் சுங்கச்சாவடிகளில் நிற்க தேவையில்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்தியாவின் சாலை உட்கட்டமைப்பில் நெடுஞ்சாலைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. நாட்டில் எந்தவொரு நகரங்களுக்கும் விரைவாக பயணிக்க நெடுஞ்சாலைகளே உதவும். நெடுஞ்சாலை பயணங்களுக்கு சுங்கச் சாவடிகள் இடையூறாக இருக்கும். பல இடங்களில் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதை தவிர்க்கும் நோக்கில் ஒன்றிய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்ட் டேக் முறையை கொண்டு வந்தது. இந்த நடைமுறையால், சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் பெருவாரியாக குறைந்துள்ளது.

அடுத்தகட்டமாக நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணம் உருவாக்க ஒரு முக்கிய நடவடிக்கையாக ஒன்றிய அரசு நாடு முழுவதும் சாட்டிலைட் அடிப்படையிலான புதிய சுங்க கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண வசூலிக்கும் முறை என்பது அடுத்த 15 நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த புதிய முறை அமலுக்கு வந்துவிட்டால் இனி வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட்டிலைட் அடிப்படையில் சுங்கக் கட்டணங்கள் தானாகவே கழிக்கப்படும். இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பயணிக்கலாம்.

இப்போது பாஸ்ட் டேக் முறை அமலுக்கு வந்துவிட்ட பிறகும் பல சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருக்கிறது. அதை சரி செய்யவும் எரிபொருளை சேமித்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயண நேரத்தை குறைப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் என்றும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் என்று நிதின் கட்கரி கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இனி வாகனங்கள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும். வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறதோ, அதற்கேற்ப வாகனத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக் கட்டணம் நேரடியாக கழிக்கப்படும். இன்னும் 15 நாட்களில் இந்த முறை அமலுக்கு வரும். இந்த புதிய முறை சுங்க கட்டண வசூல் வந்தால் அது நமது நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பிற்கு மிக பெரிய உற்சாகத்தை தரும். நெடுஞ்சாலைகளில் பயணங்கள் இன்னும் வேகமாகவும் திறன் மிக்கதாகவும் மாறும்’ என்றார். முதலில் சோதனை முறையில் இந்த சுங்கக்கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்னர் விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.

The post சுங்கச்சாவடியில் நிற்க தேவையில்லை சாட்டிலைட் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்: 2 வாரங்களில் அமல்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nitin Khatkari ,New Delhi ,India ,Nitin Katkari ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது