×

உலகின் பழமையான மொழியான தமிழ் மீது ஆர்வம் அதிகரிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘உலகின் மிகவும் பழமையான மொழியான தமிழ் மீது இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கிறது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது: 2025ம் ஆண்டின் பல விஷயங்கள் நமக்கு பெருமிதத்தைச் சேர்த்தன. ஆபரேஷன் சிந்தூர், அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையின் அடையாளமாக ஆனது.

வந்தே மாதரத்தின் 150ம் ஆண்டு விழாவை கொண்டாடினோம். ஆண்கள் கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. பெண்கள் கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றார்கள். ஆசியக் கோப்பை டி20 போட்டிகளிலும் கூட இந்திய அணி அசத்தியது. சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையம் வரை சென்ற முதல் இந்தியர் ஆனார்.

இதன் மூலம், 2025ம் ஆண்டில் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் நாட்டின் ஈடு இணையற்ற பாரம்பரியம் அனைத்தையும் ஒன்றுசேரப் பார்க்க முடிந்தது. இப்போது 2026ம் ஆண்டில் புதிய நம்பிக்கைகள், புதிய உறுதிப்பாடுகளோடு முன்னேகிச் செல்ல தேசம் தயாராக இருக்கிறது. இன்று இந்தியா மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய காரணம் என்னவென்றால், நமது இளைஞர்கள் சக்திதான்.

பிஜியில் இந்திய மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பரப்ப ஒரு பாராட்டுக்குரிய முயற்சி நடந்து வருவதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த மாதம் பிஜியில் ராக்கீராக்கீ பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் முதன்முறையாக தமிழ் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் குழந்தைகள் மேடையில் தங்களின் தமிழ் மொழியின் பெருமை குறித்து தங்கு தடையின்று உரையாற்றினார்கள். தமிழில் கவிதைகளை கூறினார்கள். சொற்பொழிவு ஆற்றினார்கள்.

தங்களுடைய கலாச்சாரத்தை, மெத்த தன்னம்பிக்கையோடு மேடையில் வெளிப்படுத்தினார்கள். இந்தியாவிலும் தமிழ் மொழியின் பரவலாக்கத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு காசியில் காசி தமிழ் சங்கமத்தின் 4ம் பதிப்பு நடந்தது. அதில், தமிழ் கற்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. வாரணாசியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

இதன் மூலம், இந்தியை தாய்மொழியாக கொண்ட குழந்தைகளும் தமிழ் கற்றுப் பேச முயற்சிக்கின்றனர். தமிழ்மொழி உலகின் மிகவும் பழமையான மொழி. தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது. இன்று நாட்டின் பிற பாகங்களிலும் கூட குழந்தைகள்-இளைஞர்கள் மத்தியில் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இதுதான் மொழியின் பலம், இதுவே இந்தியாவின் ஒற்றுமை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags : Modi ,New Delhi ,India ,
× RELATED நீர் மூழ்கி கப்பலில் ஜனாதிபதி முர்மு பயணம்