பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய சன்ரைசர்ஸ் அணி, 247 ரன் குவித்து அட்டகாச வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக, அந்த அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா திகழ்ந்தார். 55 பந்துகளில் அவர் 141 ரன்களை குவித்து ஐதராபாத் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
அவர், வெறும் 40 பந்துகளை சந்தித்து அற்புதமாக சதம் அடித்து, வெற்றி தேவதையை சன்ரைசர்ஸ் பக்கம் நிற்கச் செய்தார். சதமடித்தவுடன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த காகிதத்தை அவர் எடுத்து ரசிகர்களை நோக்கி காண்பித்தார். அதில், ‘ஆரஞ்ச் ஆர்மிக்கு இதை அர்ப்பணிக்கிறேன்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்டு ஐதராபாத் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர்.
* சாதனைகளை தகர்த்த அபிஷேக் சர்மா
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் அபிஷேக் சர்மா 40 பந்துகளில் விளாசிய சதம், ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி வீரரால் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிவிரைவு சதமாகும். கடந்த சீசனில், அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் அடித்த சதம், முதலிடத்தில் நீடிக்கிறது. ஒட்டு மொத்த ஐபிஎல் வரலாற்றில், புனே அணிக்கு எதிராக பெங்களூரு அணிக்காக ஆடிய கிறிஸ் கெயில் 30 பந்துகளில் அடித்த சதம், ஐபிஎல் துவங்கியது முதல் 1ம் இடத்தில் நீடிக்கிறது.
அதேசமயம், சன்ரைசர்ஸ் அணிக்காக, அந்த அணி வீரர்கள் எடுத்த உச்ச பட்ச ஸ்கோராக, அபிஷேக்கின் 141 ரன் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. டேவிட் வார்னரின் 131 ரன் சாதனையை அபிஷேக் தகர்த்துள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் குவித்த இந்திய வீரராகவும், அபிஷேக் சர்மா உருவெடுத்துள்ளார். தவிர, நடப்பு சீசனில் துவக்க வீரர்களின் அதிகபட்ச ரன் குவிப்பாக, அபிஷேக் – டிராவிஸ் ஹெட் இணையின் 171 ரன்கள் திகழ்கிறது.
The post அபிஷேக்கின் அசத்தல் சதம் ஆரஞ்ச் ஆர்மிக்கு அர்ப்பணம் appeared first on Dinakaran.
