×

சில்லி பாய்ன்ட்…

* ஆஷஸ் 5வது டெஸ்டில் அட்கின்சன் ஆப்சென்ட்
சிட்னி: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 4ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கிட்சன், காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட் உள்ளிட்டோர் ஆடாத நிலையில், பிரைடன் கார்ஸ் மட்டுமே குறிப்பிடத்தக்க பந்து வீச்சாளராக ஆடவுள்ளார். அதனால், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், சுழல் வில் ஜாக்ஸ், ஷொயப் பஷீர் ஆகியோரின் பங்கு கடைசி போட்டியில் அதிகளவில் இருக்கும்.

* 177 பந்துகளில் 200 ஷான் மசூத் சாதனை
கராச்சி: பாகிஸ்தானில் பிரசிடென்ட் கோப்பைக்கான முதல் தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சுய் நார்தர்ன் கேஸ்- ஸாகர் அசோசியேட்ஸ் அணிகள் இடையே நேற்று துவங்கியது. இப்போட்டியில், சுய் நார்தர்ன் அணிக்காக ஆடிய கேப்டன் ஷான் மசூத், 177 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்தார். மொத்தத்தில், அவர் 185 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 212 ரன்களை எடுத்தார். இதன் மூலம், முதல் தர டெஸ்ட் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் விளாசிய பாக் வீரராக திகழ்ந்த இன்சமாம் உல் ஹக்கின் 33 ஆண்டு சாதனையை ஷான் மசூத் முறியடித்துள்ளார்.

* டி20யில் 8 விக்கெட் சோனம் உலக சாதனை
புதுடெல்லி: பூட்டான் – மியான்மர் கிரிக்கெட் அணிகள் இடையே, பூட்டானின் கெலெபு மைன்ட்புல்னஸ் சிட்டியில் சர்வதேச டி20 போட்டி நடந்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய பூட்டான் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்தது. பின்னர், மியான்மர் அணி ஆடியபோது, பூட்டான் அணி சுழல் பந்து வீச்சாளர் சோனம் யெஷே (22), 4 ஒவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே தந்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி, டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர், சோனம் யெஷே மட்டுமே. அவரது அபார பந்து வீச்சால் மியான்மர் அணி, 45 ரன்களில் சுருண்டது. அதனால், பூட்டான் அணி அபார வெற்றி பெற்றது.

Tags : Atkinson ,Ashes ,Sydney ,England ,Australia ,Gus… ,
× RELATED 3 குழந்தைகள் உள்ள நிலையில் பாக்....