ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, பெங்களூரு அணி, 175 ரன் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 28வது லீக் போட்டி, ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில், பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். க்ருணால் பாண்ட்யா வீசிய 7வது ஓவரில், சுயாஸ் சர்மாவிடம் கேட்ச் தந்து, சஞ்சு சாம்சன் (15 ரன்) வெளியேறினார். அதன் பின், ரியான் பராக், ஜெய்ஸ்வாலுடன் இணை சேர்ந்து ஆடினார். அதிரடியாக ஆடிய இவர்கள், சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஜெயஸ்வால், 35 பந்துகளில் அரை சதம் அடித்து தனது அதிரடியை தொடர்ந்தார். 2வது விக்கெட்டுக்கு இந்த இணை 56 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 14வது ஓவரை வீசிய யாஷ் தயாள் பந்தில், விராட் கோஹ்லியிடம் கேட்ச் தந்து, ரியான் பராக் (30 ரன்) வெளியேறினார். பின், துருவ் ஜுரெல் களமிறங்கினார்.
இவர்கள் நிதானமாக ஆடி வந்த நிலையில், ஹேசல்வுட் வீசிய 16வது ஒவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் (47 பந்து, 2 சிக்சர், 10 பவுண்டரி, 75 ரன்), எல்பிடபிள்யு முறையில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். பின்னர், ஷிம்ரோன் ஹெட்மயர், துருவ் உடன் இணை சேர்ந்தார். 20வது ஓவரில், ஹெட்மயர் (9 ரன்) ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்தது. துருவ் ஜுரெல் 35, நிதிஷ் ராணா 4 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். பெங்களூரு தரப்பில், புவனேஷ் குமார், யாஷ் தயாள், ஹேசல்வுட், க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதையடுத்து, 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் பில் சால்ட், விராட் கோஹ்லி அபாரமாக ஆடி அநாயாசமாக ரன்களை குவித்தனர். பவர் பிளே ஓவர்கள் முடிவில் பெங்களூரு, விக்கெட் இழப்பின்றி 65 ரன் குவித்தது. குமார் கார்த்திகேயா வீசிய 9வது ஓவரில், ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் தந்து பில் சால்ட் (33 பந்து, 6 சிக்சர், 5 பவுண்டரி, 65 ரன்) அவுட்டானார்.
பின் வந்த தேவ்தத் படிக்கல்லும், அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினார். பெங்களூரு அணி, 9.3 ஓவரில் 100 ரன், 15.1 ஓவரில் 150 ரன்னை எட்டியது. 17.3 ஓவரில் பெங்களூரு, ஒரு விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது. இதன் மூலம், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் விராட் கோஹ்லி (45 பந்து, 2 சிக்சர், 4 பவுண்டரி, 62 ரன்), படிக்கல் (28 பந்து, 40 ரன்) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
The post ஐபிஎல் 28வது லீக் போட்டி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சிங்கநடை போட்ட பெங்களூரு appeared first on Dinakaran.
