- நைஜீரியா
- ஆஃப்கான்
- ரபாத்
- துனிசியா
- AFCON கால்பந்து சாம்பியன்ஷிப்
- ஆப்பிரிக்க கோப்பை நாடுகள்
- ரபாத், மொராக்கோ...
ரபாட்: ஆப்கோன் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, நைஜீரியா அணி, 3-2 என்ற கோல் கணக்கில் துனீஷியாவை வீழ்த்தி நாக்அவுட் சுற்றில் நுழைந்தது. ஆப்ரிக்க நாடுகளின் அணிகள் மோதும், ஆப்ரிக்கா கப் ஆப் நேஷன்ஸ் (ஆப்கோன்) கால்பந்தாட்ட போட்டிகள் மொராக்கோவின் ரபாட் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் நைஜீரியா – துனீஷியா அணிகள் மோதின.
போட்டி துவங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 44வது நிமிடத்தில் நைஜீரியா வீரர் விக்டர் ஒஸிம்ஹென் தனது அணிக்காக முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து 50வது நிமிடத்தில் வில்ப்ரட் நிடிடி 2வது கோல் போட்டார். பின்னர், 67வது நிமிடத்தில் நைஜீரியாவின் அடெமோலா லூக்மான் கோல் போட்டதால், அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான நிலையில் இருந்தது.
அதன் பின் எழுச்சியுடன் ஆடிய துனீஷிய வீரர்கள் கோல் போடுவதில் தீவிரம் காட்டினர். 74வது நிமிடத்தில் துனீஷியாவின் மான்டஸார் தால்பி முதல் கோல் போட்டார். பின், அந்த அணியின் அலி அல் அப்தி 87வது நிமிடத்தில் 2வது கோல் போட்டு அசத்தினார். இருப்பினும் அதன் பின் கோல் எதுவும் விழாததால், 3-2 என்ற கோல் கணக்கில் நைஜீரியா அணி வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியை அடுத்து, அந்த அணி நாக்அவுட் சுற்றில் நுழைந்தது.
