கோவை: பாஜ மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக-பாஜ கூட்டணிக்காக அண்ணாமலையிடம் இருந்து பாஜ மாநிலத்தலைவர் பதவி பறிக்கப்பட்டு இருப்பது, அவரது ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ மாநிலத் தலைவர் மாற்றத்திற்கு எதிராக அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, எக்ஸ் சமூக வலைதள பக்கங்களில் அண்ணாமலை தனிக்கட்சி துவங்க வேண்டும், அண்ணாமலை இல்லாத பாஜவை எதிர்ப்போம், மீண்டும் வேண்டும் அண்ணாமலை, இனி பாஜ தமிழ்நாட்டில் வளர வாய்ப்பு இல்லை போன்ற பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே கோவை நகரில் ‘மீண்டும் வேண்டும் பாஜ மாநிலத்தலைவராக அண்ணாமலை’ என்ற வாசகங்கள் மற்றும் அண்ணாமலையின் படம், தாமரை சின்னம் உள்ளிட்டவையுடன் அண்ணாமலை ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். குறிப்பாக அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், விமான நிலையம், பீளமேடு, கருமத்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த போஸ்டர்கள் பாஜவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் பாஜவில் உட்கட்சி மோதல் வெடித்தது appeared first on Dinakaran.
