சென்னை: 200 கோடி ரூபாய் வருமானத்தை விட்டு வரவில்லை, அரசியலில் 2 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என வந்திருக்கிறார் விஜய் என செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் நடந்த துணை முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். திமுக சார்பில், செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பங்கேற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: எழுதி வைத்து பேசுவது எனக்கு பிடிக்காது, மனதில் பட்டதை பேசுவேன்.
கடவுளை யாரும் நேரில் பார்த்ததில்லை. அதுபோல உயிரை யாரும் நேரில் பார்த்ததில்லை. தமிழ்நாட்டில் ஒருத்தர் மட்டுமே நடிகர் போல் நடந்து வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருபவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கலைஞர்களை வாழ வைப்பது மக்கள்தான். கரூர் சம்பவத்தை மேற்கோள்காட்டி யுத்தகளமாக இருந்தாலும் மக்களை நேரில் சந்திப்பவன்தான் தலைவனாக இருக்க முடியும். மதவாத கூட்டத்தை தமிழ்நாட்டிற்குள் விட்டுவிட்டால் மொழி, இனம் அழிந்துவிடும். 100 நாள் வேலை திட்டம் அழிவை நோக்கி செல்கிறது. காந்தி நாட்டிற்காக உழைக்கவில்லையா, தேசத்திற்காக ஒரு சுண்டுவிரல் மண்ணைகூட கிள்ளி போடாதவர்கள்தான் ஆர்எஸ்எஸ் கும்பல். தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்தவர் எடப்பாடி.
தமிழ்நாட்டில் அனைவரையும் பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செய்து வருகிறது. 200 கோடி ரூபாயை விட்டுவிட்டு வருகிறேன் என கூறுகிறார், உன்னிடம்தான் 2000 கோடி உள்ளதே அப்புறம் என்ன. 200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு வரவில்லை, 2 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை வைத்து கொண்டு விஜய் வந்திருக்கிறார். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
