×

உலகையே வென்றதாக மார்தட்டிய அவுரங்கசீப் மராட்டிய மண்ணிலேயே வீழ்ந்தார்: அமித்ஷா பேச்சு

ராய்கட்: உலகையே வென்றதாக மார்தட்டிய முகலாயப் மன்னன் அவுரங்கசீப் மராட்டிய மண்ணிலேயே வீழ்ந்ததாக அமித்ஷா தெரிவித்தார். மகாராஷ்டிர மக்களின் பெரும் மதிப்புக்குரிய மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 345வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று மகாராஷ்டிராவுக்கு வந்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராய்காட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜியின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது முதல்வர் பட்நவிஸ், துணை முதல்வர் ஷிண்டே மற்றும் அஜித்பவார், சிவாஜி மகாராஜாவின் வம்சாவளியான எம்பி உதயன்ராஜே போசலே, அமைச்சர் சிவேந்திரசிங் போசலே ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஒன்றியமைச்சர் அமித்ஷா கூறியதாவது: சிவாஜி மகாராஜாவின் வழிகாட்டுதல்கள் அனைத்தும், நாட்டை வல்லரசாக்க வேண்டுமென்ற இந்தியாவின் லட்சியத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும். சிவாஜி மகாராஜாவை மகாராஷ்டிர மக்கள் மட்டும் சொந்தம் கொண்டாட வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். அவரது மன உறுதியும், தைரியமும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஊக்கமளிக்கும். முகலாயர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தவர் சிவாஜி மகாராஜா.

நான் உலகையே வென்றவன் என மார்தட்டிக் கொண்ட முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், வாழ்நாள் முழுவதும் மாராட்டியர்களுக்கு எதிராக போர் புரிந்தார். ஆனால் அவர் இதே மண்ணில் செத்து மடிந்தார். அவரது கல்லறையும் இந்த மண்ணில் தான் இருக்கிறது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். சிவாஜி மகாராஜாவின் வழிகாட்டுதலால் தான் நம் நாட்டின் கடற்படை உருவானது. இப்போதும் கடற்படையில் அவரது சின்னமே பயன்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியும், சிவாஜி மகாராஜாவின் வழிகாட்டுதலை பின்பற்றியே நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post உலகையே வென்றதாக மார்தட்டிய அவுரங்கசீப் மராட்டிய மண்ணிலேயே வீழ்ந்தார்: அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Aurangzeb ,Maharashtra ,Amit Shah ,Raigad ,king ,Chhatrapati Shivaji Maharaja ,
× RELATED வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு பிராந்திய உணவு வகைகள் அறிமுகம்