- பாங்குனி தேரோட்டம்
- பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில்
- பட்டுக்கோட்டை
- பங்கூனி
- தேர் ஊர்வலம்
- தஞ்சாவூர் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பங்குனி தேர் ஊர்வலம்
- தின மலர்
பட்டுக்கோட்டை, ஏப்.12: பட் டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனி தேரோ ட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி நாடியம்மன் மூலஸ்தானத்திலிருந்துமண்டகப்படிக்கு எழுந்தருளினார். பின்னர் தினசரி அம்பாள் வீதி உலா நடந்தது. விழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகளும், இன்னிசை கச்சேரிகளும், பட்டிமன்றங்களும், பாட்டு மன்றங்களும் நடைபெற்றன. பங்குனி பெருந்திருவிழாவில் முக்கிய விழாக்களான வரகரிசி மாலைத் திருவிழா, வெண்ணைத்தாழி திருவிழா, மாவிளக்குத் திருவிழா, தேரோட்டம் என நாடியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாவிளக்குத் திருவிழா அன்று நாடியம்மன் மண்டகப்படியிலிருந்து மூலஸ்தானத்திற்கு எழுந்தருளினார்.
அப்போது பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் நாடியம்மன் கோயிலுக்கு வந்து மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர். குறிப்பாக இந்த ஆண்டு மாவிளக்குத் திருவிழா அன்று காலையிலிருந்து இரவு வரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து நாடியம்மனை தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு குத்தி காவடி, தீச்சட்டி எடுத்து நாடியம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவின் முக்கிய விழா தேரோட்டம். இந்த தேரோட்டம் இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் நாள் தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. தேரடித் தெருவிலிருந்து தேர் புறப்பட்டு வடசேரி ரோடு, பிள்ளையார் கோயில் தெரு வளைவில் தேர் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடந்தது.
வாணவேடிக்கைகள் முழங்க தேர் வடம் பிடிக்கப்பட்டது. செண்டை மேளம் விண்ணை அதிர வைக்க பட்டுக்கோட்டை பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து தேர் புறப்பட்டது. பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர்ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து புறப்பட்ட தேர் தலைமை தபால் நிலையம் வழியாக, பெரிய தெரு, மணிக்கூண்டு, தலையாரிதெரு வழியாக தேரடித்தெருவில் உள்ள தேரடிக்கு தேர் வந்து நிலையை அடைந்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் பட்டுக்கோட்டை நகர கடை வீதிகள் குலுங்கின. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீர் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், எஸ்.எஸ்.ஐக்கள், ஊர்க்காவல் படையினர் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா அறிவுறுத்தலின்பேரில், பட்டுக்கோட்டை சரக ஆய்வாளர் ஜெயசித்ரா, கோயில் செயல் அலுவலர் சுந்தரம், கணக்கர் சரவணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
The post பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம் appeared first on Dinakaran.
