×

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க அமைச்சர் இ.பெரியசாமி அறிவுரை

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரகம், பனகல் மாளிகை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வளர்ச்சித் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் அறிவிப்புகளின் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் புதுப்பிக்கும் திட்டம் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டார். கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2024-25-ன் கீழ் ஒரு லட்சம் வீடுகள் இலக்கு வழங்கப்பட்டு இதுநாள்வரை 30,236 வீடுகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

13,388 வீடுகளின் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. மீதமுள்ள வீடுகள் கட்டும் பணி பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளது. இவை அனைத்தும் மே 2025 மாதத்திற்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நாளது தேதிவரை ரூ.2733.51 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.2597.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2025-26 ஆம் ஆண்டின் கீழ் ரூ.3,500 கோடியில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு 1 லட்சம் வீடுகள் புதிதாக கட்டப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதத்தில் நாளது தேதிவரை இத்திட்டத்தில் 76,608 வீடுகளுக்கு…நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

2000-01 ஆண்டிற்கு முன் பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள சுமார் 2.50 லட்சம் ஊரக குடியிருப்புகள் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வரும் இரண்டு ஆண்டுகளில் பழுது நீக்கம் செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பின் படி, 2024-25 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் ஓடு மற்றும் சாய்தள கான்கிரீட் வீடுகளில் உள்ள சிறு பழுது மற்றும் பெரும் பழுது நீக்கப் பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 99,219 எண்ணிக்கை வீடுகளுக்கு ரூ.812.00 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 93,682 வீடுகளின் பழுது நீக்கம் பணி நிறைவுபெற்றுள்ளது. இப்பணிகளை நிறைவேற்ற தற்போது வரை ரூ.725.00 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டம் கட்டம்-II-ன் கீழ் சிறு மற்றும் பெரும்பழுது நீக்கப்பணிகள் மொத்தமாக 14,469 எண்ணிக்கைக்கு ரூ.140.34 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.

ஊரக பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 2001 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கீரிட் கூரை கொண்ட வீடுகளுக்கு மாற்றாக 210 சதுர அடி பரப்பளவில் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்ய முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம், 2025-ம் ஆண்டில் ரூ600 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை உரிய காலத்தில் தேர்வு செய்து பணியினை விரைந்து துவக்கிட அமைச்சர் அறிவுரை வழங்கினார். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1805 கோடி மதிப்பீட்டில் சாலைகளை மேம்படுத்துவதற்காக 2024-25 ஆம் ஆண்டில், 3888 கிமீ நீளமுடைய 2837 சாலை பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அதில் 1761 பணிகள் நிறைவடைந்துள்ளது,மீதமுள்ள சாலைப் பணிகள் விரைவில் முடியகூடிய நிலையில் உள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பிற முதன்மை திட்டங்களான, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்–II, சமத்துவபுரம், நமக்கு நாமே திட்டம் (ஊரகம்), சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (SIDS/SIUS), குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (CFSIDS), பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் ஆகிய திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் பின் தங்கிய கிராமப் பகுதிகளில் அரசு நலத்திட்டங்களை குறித்த காலத்தில் கொண்டு சேர்த்து திட்டப் பணிகளை விரைவில் முடித்திடவும், அவ்வப்போது பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலனை செய்து பொது மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளை தாமதம் இன்றி நிறைவேற்றிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பா.பொன்னையா, ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, ர.அனாமிகா, கூடுதல் இயக்குநர் (பொது), இயக்ககத்தின் அனைத்து கூடுதல் இயக்குநர்கள், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள், மாவட்டங்களின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க அமைச்சர் இ.பெரியசாமி அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Minister ,E. Peryasamy ,Chennai ,Rural Development ,Rural ,Development ,Panagal Mansion Partnership ,Directorate of Rural Development and Public Works ,Department of Rural Development ,Peryasami ,Chief Minister ,E. Peryasami ,Dinakaran ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...