×

தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: தை திருநாளை முன்னிட்டு 18,000 ஒருகால பூஜை திட்ட திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பை நிறைவேற்றிடும் வகையில் தமிழர் நாளாம் தைத்திருநாளை முன்னிட்டு 18,000 ஒருகால பூஜை திட்ட திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 100 அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகளை வழங்கினார்.

அதை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, 2,122 திருக்கோயில்களின் 4,193 அர்ச்சகர்களுக்கும் இரண்டு இணை புத்தாடைகள் மற்றும் 9,348 பணியாளர்களுக்கும் இரண்டு இணை சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கின்ற 18,000 திருக்கோயில்களுக்கும் இந்த ஆண்டு முதல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 1,000 குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் 32 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 84 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுமார் 1,200 சதுரடி பரப்பிலும் குடியிருப்புகள் மிக நேர்த்தியாக கட்டி வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசின் தாரக மந்திரத்திற்கு இது ஒன்றே சான்றாகும். திருத்தணி திருக்கோயில் யானை மணிமண்டபம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது, விரைவில் திறக்கப்படும்.

திருக்கோயில்களுக்கு யானைகளை வழங்க வேண்டுமென்றால் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, பல்வேறு சட்ட, விதிகளை கடைபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு யானைகளை பெறுவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Tags : Minister ,Sekarbabu ,Chennai ,Minister for Religious Affairs ,Orukaala Puja Project ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Hindu ,Religious Affairs ,Minister Sekarbabu… ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...