×

சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கூடி அரோகரா கோஷங்களுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பங்குனி பெருவிழா 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் தேதி தேரோட்டமும், 10ம் தேதி அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெரும் என கூறப்பட்டது. சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கபாலீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பங்குனி பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழா 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி 3ம் தேதி நடந்த கிராம தேவதை பூஜையில் அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சியும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகன வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். நாளை தேதி அதிகார நந்தி எழுந்தருளும் நிகழ்வும், வரும் 9ம் தேதி தேர் திருவிழாவும், 10ம் தேதி அறுபத்து மூவர் திருவிழாவும், 12ம்தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.

அதனை தொடர்ந்து வரும் 13ம்தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் பறி உற்சவமும் நடைபெற்று, 14ம்தேதி திருமுழுக்குடன் பங்குனி பெருவிழா நிறைவடைகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகமும், காவல்துறையும் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி 3ம் தேதி முதல் 12ம்தேதி வரை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவித்திருக்கிறது.

The post சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Mahilapur Kabaliswarar Temple ,Panguni Festival ,Chennai ,Annual Panguni Festival ,Kabaliswarar Temple ,Mayilapur ,Mayilapur Kabaliswarar temple ,
× RELATED டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு...