×

சட்டப்பேரவைக்குள் இனி யாரும் பதாகைகள் கொண்டு வரக்கூடாது; பேட்ஜ் அணிந்து வரக்கூடாது: எம்எல்ஏக்களுக்கு பேரவைத்தலைவர் அப்பாவு உத்தரவு

சென்னை: சட்டப்பேரவைக்குள் இனி யாரும் பதாகைகள் கொண்டு வரக்கூடாது மற்றும் பேட்ஜ் போன்றவை அணிந்து வரக்கூடாது என்று எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நீதிமன்றத்தில் உள்ள பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் பேசக்கூடாது என்று என்று சபாநாயகர் அப்பாவு அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினர்கள் சிலர் அவைக்குள் பதாகையை தூக்கி காட்டி கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் 14 பேர் அவையில் இருந்து அவை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். அதேபோன்று ‘அந்த தியாகி யார்? என்ற வாசனம் அடங்கிய பேட்ஜ் அணிந்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு பேரவையில் ஒரு தீர்ப்பு வாசித்தார். அதில் ‘அதிமுக உறுப்பினர்கள் சிலர் இன்று ஒரு பதாகையை தூக்கி பிடித்து கொண்டிருந்தனர். பதாகையை தூக்கி காட்டிய அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சட்டப்பேரவயைில் இருந்து ெவளியேற்றப்பட்டுள்ளனர். பேரவை விதிகளின்படி இரண்டு முறை கூட்டத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டால், இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் கலந்து கொள்ள முடியாது. அதனால் அவர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் கலந்துகொள்ள அனுமதிக்க முடியாது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சபாநாயகர் ஒரு தீர்ப்பு அளித்துள்ளீர்கள். வெளியேற்ற அதிமுக உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் பேரவை நடவடிக்கையில் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லி உள்ளீர்கள். அவர்களின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று (நேற்று) ஒரு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்றும், நாளை (இன்று) முதல் பேரவை கூட்டங்களில் அவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

சபாநாயகர் அப்பாவு: முதல்வரின் கோரிக்கையை ஏற்று நாளை (இன்று) முதல் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று சட்டப்பேரவைக்குள் இனி பதாகைகள் தூக்கி பிடிப்பது மற்றும் வில்லைகள் (பேட்ஜ்) அணிந்து எம்எல்ஏக்கள் வர அனுமதி கிடையாது என்றார்.

வெளியேறிய அதிமுகவினர்; வெளியேறாத செங்கோட்டையன்
சட்டபேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறிய நிலையில், அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் வெளியே சென்றுவிட்டு, ஒரு சில நிமிடத்தில் பேரவைக்குள் வந்து அவை நடவடிக்கையில் கலந்து கொண்டார். அவர் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசினார். அப்போது அவரது மேல் சட்டை பாக்கெட்டில் ஒரு பேட்ஜ் அணிந்து இருந்தார். அதை கழற்றிவிட்டு பேசும்படி சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று, அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் தனது சட்டையில் அணிந்து இருந்த பேட்ஜை கழற்றி தனது சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். அதன்பிறகு அவர் கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசினார்.

The post சட்டப்பேரவைக்குள் இனி யாரும் பதாகைகள் கொண்டு வரக்கூடாது; பேட்ஜ் அணிந்து வரக்கூடாது: எம்எல்ஏக்களுக்கு பேரவைத்தலைவர் அப்பாவு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Speaker ,Edappadi Palanisami ,Tamil Nadu Legislature ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…