×

பாஜ டார்கெட்…. அதிமுக டர்ர்…..

திருப்பூர்: தமிழகத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக, பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் 59 தொகுதிகள் வரை பாஜ தரப்பில் கேட்கப்பட்டு வருவதால் அதிமுக மற்றும் பாஜ கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாஜ மற்றும் அதிமுக தலைமை சார்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் எத்தனை சீட் மற்றும் எந்தெந்த தொகுதிகள் போன்றவையில் உடன்பாடு ஏற்படவில்லை.

யாரும் எதிர்பார்க்காத வகையில் கூடுதலான தொகுதிகள் பாஜ சார்பில் கேட்கப்பட்டு வருவது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில், 3 தொகுதிகளில் போட்டியிட பாஜ குறி வைத்துள்ளது. இந்தமுறை கட்டாயம் 3 தொகுதிகளை பெற்றே தீர வேண்டும் என்ற முயற்சியில் பாஜவினர் தேர்தல் வியூகத்தை தொடங்கியுள்ளனர். பாஜ சார்பில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய 3 தொகுதிகளில் அதிமுகவிற்கு பதிலாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதில், திருப்பூர் வடக்கு தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே 2 முறை அதிமுக எம்எல்ஏவாக விஜயகுமார் இருந்துவரும் நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட பாஜ ஆர்வம் காட்டி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வடக்கு தொகுதியில் உள்ள பாண்டியன்நகரில் பாஜ சார்பில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

இதேபோல் தெற்கு தொகுதியை பொறுத்தவரை சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக இருந்தாலும், அதிமுக உட்கட்சி பூசலை பயன்படுத்தி அங்கு போட்டியிட பாஜ ஆர்வம் காட்டுகிறார்கள். பல்லடம் தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே அதிமுக எம்எல்ஏவாக இருக்கிற எம்எஸ்எம்.ஆனந்தனுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் அங்கு உட்கட்சி பூசல் அதிக அளவில் உள்ளது.

இதனால் அவருக்கு மீண்டும் அங்கு சீட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த எம்எஸ்எம்.ஆனந்தனும் வேறு தொகுதியில் போட்டியிட சீட்கேட்டு வருகிறார். இதனால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பல்லடம் தொகுதியில் போட்டியிட பாஜவினர் காய் நகர்த்தி வருகிறார்கள். தலைமையிடமும் இதனை தெரிவித்துள்ளனர்.

பாஜவின் இந்த தேர்தல் நகர்வு திருப்பூர் மாவட்ட அதிமுகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பலம் அதிகமாக உள்ள வடக்கு மற்றும் பல்லடம் தொகுதிகளில் பாஜ போட்டியிட மல்லுக்கட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக உள்ள நிலையில், பாஜவின் இந்த நெருக்கடி எடப்பாடிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

Tags : Baja ,Tiruppur ,Tamil Nadu ,Adimuka ,Bahja alliance ,Bahá'í ,Adimuga ,
× RELATED தொகுதி மாற்றமா? வானதி டென்ஷன்