நெல்லை: தென்மாவட்டங்களில் உள்ள ரசிகர்களை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்கி சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த நடிகர் சரத்குமார் (நாட்டாமை), ஒருநாள் இரவில் மனைவியிடம் ஆலோசனை கேட்டு திடீரென சொந்த கட்சியை, தேசிய கட்சியான பாஜவோடு இணைத்து விட்டார். அக்கட்சியில் நிர்வாகிகளாக இருந்த பலர் பாஜவில் இணைந்து விட்டாலும், அவரது முடிவு பிடிக்காமல் சில நிர்வாகிகள் மற்ற கட்சிகளிலும் பயணித்து வருகின்றனர்.
இருப்பினும் சரத்குமார் மீதான ஈடுபாடு ரசிகர்களுக்கு குறைந்தபாடில்லை. தென்மாவட்டங்களுக்கு அடிக்கடி விசிட் வரும் சரத்குமாரை அவரது ரசிகர்கள் மீண்டும் தேர்தல் களம் காண வற்புறுத்தி வருகின்றனர். நல்ல தொகுதி கிடைத்தால் நாட்டாமையும் பாஜ சார்பில் களம் புகும் ஆவலில்தான் இருக்கிறார். இருப்பினும் வலிய போய் தொகுதி கேட்டால், அதிமுக – பாஜ கூட்டணியில் திருச்செந்தூரை (முருகன் கோயில் தொகுதி) நம் தலையில் தூக்கி வைத்து கட்டி விடுவார்களே என்ற பயத்தில் சமத்துவ நாயகன் இப்ேபாது சப்தமின்றி அமைதி காத்து வருகிறார்.
ரசிக சொந்தங்களின் தூண்டில் காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அல்லது தென்காசி கொடுத்தால் போட்டியிட்டுதான் பார்க்கலாமே என்ற ஆவலில் நாட்டாமை ஆர்வம் காட்டுகிறாராம். அதிலும் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற தென்காசி கிடைத்தால் ஏகத்துக்கும் சந்தோஷம் என்கிறது நடிகர் தரப்பு. ஆனால் அதிமுகவோ முன்னாள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்காக தென்காசியை விட்டுத் தர மனமில்லாமல் உள்ளது.
அதிமுக- பாஜ கூட்டணியில் 3 முதல் 5 தொகுதிகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ள தமிழ் மாநில காங்கிரசும், தெற்கில் எங்களுக்கு தென்காசி தொகுதி வேண்டும் என்கிறது. தமாகா தெற்கு மாவட்ட தலைவர் என்டிஎஸ் சார்லசும் அத்தொகுதி கேட்டு அடம் பிடிப்பதால், தமாகாவின் குறியும் தென்காசி மீதே உள்ளது. ஏற்கனவே அதிமுகவோடு கூட்டு வைத்து சமத்துவ கட்சியில் வெற்றி பெற்ற மற்றுமொரு தொகுதியான நாங்குநேரி தொகுதியிலும் இப்போது அடிபிடி சண்டை நடக்கிறது. ஆனால், ஏற்கனவே களம் கண்ட தொகுதி என்கிற அடிப்படையில் நாங்குநேரியை விட்டுத் தர அதிமுகவும் தயாராக இல்லை.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எந்தத் தொகுதி கிடைத்தாலும் நாட்டாமை நடிகருக்காக களம் இறங்க காத்திருக்கிறோம் என்கிறது அவரது ரசிகர்கள் பட்டாளம். ஆனால், திருச்செந்தூர் என்றால் திரும்பிப் பார்க்கவே மாட்டோம் என்கின்றனர். அதாவது, 2011ல் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. அப்போது சரத்குமாருக்கு தென்காசி தொகுதியும், நாங்குநேரி தொகுதி அவரது கட்சியின் மூத்த தலைவராக இருந்த எர்ணாவூர் நாராயணனுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த 2 தொகுதிகளிலும் சமக வெற்றி பெற்றது.
ஆனால், 2016ல் சரத்குமாருக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. திமுக பலம் வாய்ந்த அந்த தொகுதியில் 2001 முதல் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து களம் கண்டார் சரத்குமார். திமுக சார்பில் போட்டியிட்ட அனிதாவிடம் சரத்குமார் சரணடைந்தார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், அனிதாவின் தேர்தல் வியூகத்தால் சரத்குமார் தோல்வியை தழுவினார். தற்போதும் அந்தத் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தான். எனவே, மீண்டும் அவர் தான் 2026 தேர்தலில் களம் காண்பார் என்பதால், திருச்செந்தூர் தொகுதி என்றாலே நடிகர் படையினர் திகிலாக பார்க்கின்றனர்.
