மதுரை : ரிசர்வ் வங்கியின் தங்க நகைக்கடன் தொடர்பான சுற்றறிக்கை சட்டவிரோதமானது; செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில், வங்கியின் தலைமை பொதுமேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த பிச்சை ராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் கடந்த 2024 செப்.30ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் நகைக் கடன் தொடர்பாக பல வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரே பான் எண்ணைப் பயன்படுத்தி பல நகைக்கடன்களை பெறுதல், நகைக்கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திருப்பி வைத்தல், புதுப்பித்தல் ஆகியவை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் தெளிவற்றவையாக உள்ளன.
மக்களின் பொதுநலனுக்கு எதிராகவும் உள்ளன. தற்போதைய வழிகாட்டுதல்படி, நகை திருப்பும்போது முழுத்தொகையும் செலுத்த வேண்டி உள்ளது. இதனால், ஏழை மக்கள் நகைகளை இழக்கும் நிலை ஏற்படும். மேலும், ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக்கடன்களை பெற முடியும். நகர்ப்புறங்களில் ஒரு கிராமுக்கு ரூ.5000, கிராமப்புறங்களில் ரூ.7500 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டை ஏற்க இயலாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது. எனவே, தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது; செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொதுமேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
The post ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் சுற்றறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு: தலைமை பொதுமேலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.
