×

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பதற்கு வாடகை தராதவர்களை அப்புறப்படுத்த வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தென்காசி அண்ணாமலை நாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு எதிராக அதே பகுதியை சேர்ந்த உடுமன் மொஹிதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில், அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் இடம் விற்பனை செய்யப்பட்டதாக 1997ம் ஆண்டு நில விற்பனை உத்தரவை அறநிலையத்துறை ஆணையர் ரத்து செய்தார். விற்பனை செய்யப்பட்ட கோயில் நிலத்திற்கு யாரும் உரிமை கோர முடியாது என்று தென்காசி மாவட்ட நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்நிலையில், கோயில் நிலத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 81 ஆக்கிரமிப்பாளரிடம் வாடகை வசூலிக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. ஆனால், கோயில் இடத்திற்கு வாடகை தர முடியாது என்று ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் உரிய பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள், ஆர்.சுரேஷ்குமார், மரியா கிளாடி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாது. அனைவருக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வாடகையை வசூலிக்க வேண்டும். வாடகை தர எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அப்புறப்படுத்தும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க காவல்துறை போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதி தள்ளிவைத்தனர்.

The post கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பதற்கு வாடகை தராதவர்களை அப்புறப்படுத்த வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Department of Charities ,Chennai ,Uduman Mohideen ,Madras High Court ,Tenkasi ,Annamalai Nathar Temple ,Department of Charities… ,Dinakaran ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்