×

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ஏப்.3ம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 11ம் தேதி திருக்கல்யாணம்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில், வரும் ஏப்.3ம்தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சென்னையில் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாக திருவான்மியூர் திருப்பரசுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் கோயில் திகழ்கிறது. இக்கோயிலில், வருடம்தோறும் பங்குனி திருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு திருவிழா வரும் ஏப்.3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி, வரும் 1ம்தேதி இரவு ஊர் எல்லை காவல் தெய்வமான  செல்லியம்மன் வீதி உலாவும், 2ம்தேதி இரவு  விநாயகர் வீதி உலாவும் நடக்கிறது. தொடர்ந்து, 3ம்தேதி இரவு 8.50 மணிக்கு விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம், யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்தி வீதிஉலா நடக்கிறது.

4ம்தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் சூரிய பிரபையில் காமதேனுக்கு காட்சி அருளல், இரவு 8.30 மணிக்கு சந்திரசேகரர் சந்திரனுக்கு காட்சியருளல் மற்றும் தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. 5ம்தேதி காலை 6 மணிக்கு சந்திரசேகரர் நந்தி வாகனத்தில் சூரியனுக்கு காட்சி அருளல், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சந்திரசேகர் பூத வாகனத்தில் சந்திரசேகருக்கு காட்சி அருளல், தொடர்ந்து இரவு 10 மணிக்கு தியாகராஜர் 3ம் பவனி, பார்த்தசாரதிக்கு அருளல், 6ம்தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் புருஷா மிருக வாகனத்தில் பிரிங்கி முனிவருக்கு காட்சியருளல், இரவு 8.30 மணிக்கு சந்திரசேகரர் நாக வாகனத்தில் காட்சி அருளல்,

தொடர்ந்து, இரவு 10 மணிக்கு தியாகராஜர் நான்காம் பவனி சந்திரனுக்கு அருளல், 7ம்தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகரர் தொட்டி விழா எமதர்மனுக்கு அருளல், இரவு 9 மணிக்கு சந்திரசேகர் விடையூர்திக் காட்சி (ரிஷப வாகனம்). இதை தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா, இரவு 2 மணிக்கு தியாகராஜர் 5ம் திருப்பவனி ராமன் – ராமபிரானுக்கு அருளல், 8ம்தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் ரட்சகவிற்கு அருளல், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சந்திரசேகரர் யானை வாகனத்தில் காட்சி அருளல், இரவு 10 மணிக்கு தியாகராஜர் 6ம் திருப்பவனி இந்திரனுக்கு அருளல், 9ம்தேதி காலை 6.30 மணிக்கு சந்திரசேகர் தேர் திருவிழா பிரம்மனுக்கு காட்சியருளல், தொடர்ந்து இரவு 9 மணிக்கு சந்திரசேகர் புஷ்ப விமானம், தியாகராஜ வீதி உலா.

10ம்தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் நான்கு மறைகளுக்கு அருளல், தொடர்ந்து மாலை 6 மணிக்கு சந்திரசேகரர் பரிவேட்டை விழா, இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா, 11ம்தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி அருளல், இரவு 10 மணிக்கு தியாகராஜர் வீதி உலா.

12ம்தேதி காலை 6.30 மணிக்கு சந்திரசேகரர் கடல் நீராடல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு திருப்பரசுந்தரி தியாகராஜ சுவாமி திருமண விழாவும், இரவு 10.30 மணிக்கு கொடியிறக்கம், தொடர்ந்து வான்மீகி முனிவருக்கு 18 திரு நடன காட்சி அருளி வீடுபேறு அளித்தல் நிகழ்ச்சி. 13ம்தேதி மாலை 6 மணிக்கு சந்திரசேகர் தெப்ப திருவிழா, அதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, அதனை தொடர்ந்து தியாகராஜர் – திருப்பரசுந்தரி அம்மனுக்கு அருளல் நிகழ்ச்சியும் தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு பந்தம்பரி 18 திருநடனக் காட்சி அருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவும், கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஸ்டாலின்குமார் செய்து வருகிறார்.

The post திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ஏப்.3ம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 11ம் தேதி திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Panguni festival ,Thiruvanmiyur Marundeeswarar Temple ,Thirukalyanam ,Duraipakkam ,Panguni Uttara festival ,Thiruvanmiyur Thiruparasundari Ambal Udanurai Marundeeswarar Temple ,Chennai ,Thirukalyanam on the 11th ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்