×

விழுப்புரத்தில் பரபரப்பு செல்போன் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்  சர்வீசுக்கு பணம் கேட்டதால் வெறிச்செயல்  2 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்

விழுப்புரம், மார்ச் 29: செல்போன் கடையில் பெட்ரோல்குண்டு வீசிய வாலிபரை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே கா.குப்பத்தை சேர்ந்தவர் அன்சாரி மகன் ஜாகீர் உசேன்(28). இவர் கிழக்கு பாண்டி ரோட்டில் ரெட்டியார் மில் பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், மகாராஜபுரத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் அருண்குமார்(23) என்பவர் தனது செல்போனை சர்வீசுக்கு கொடுத்துள்ளார். அப்போது இந்த பழுதை நீக்க ஜாகீர் உசேன் ரூ.200 கேட்டுள்ளார். அப்போது அருண்குமார், செல்போனை சர்வீஸ் செய்து வையுங்கள், பின்னர் பணம் தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்

நேற்றுமுன்தினம் மீண்டும் கடைக்கு சென்ற அருண்குமார், தனது செல்போனை கேட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ஜாகீர்உசேன் ரூ.200 பணம் கேட்டதற்கு, தரமுடியாது என்று கூறியதால், செல்போனை தர மறுத்த ஜாகீர்உசேன், பணத்தை கொடுத்து செல்போனை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் கடையில் தகராறு செய்துவிட்டு அருண்குமார் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் கடைக்கு சென்ற அருண்குமார், கடையில் இருந்த ஜாகீர்உசேன் சகோதரர் ஷேக்அலாவுதீனிடம், தனது செல்போனை கேட்டுள்ளார். மீண்டும் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த அருண்குமார், தான் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பெட்ரோல் நிரப்பிய குண்டுகளை சரமாரியாக வீசி வெடிக்க வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் ஷேக்அலாவுதீன் காயமடைந்து மயங்கி விழுந்தார். மேலும் கடையில் இருந்த செல்போன்களும் தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறியது. அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். வெளியே சென்றிருந்த ஜாகீர் உசேன் தகவல் அறிந்து உடனடியாக கடைக்கு வந்தார். தகவலறிந்த விழுப்புரம் நகர காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். காயமடைந்த ஷேக்அலாவுதீனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கொலை முயற்சி வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அருண்குமாரை 2 மணிநேரத்தில் பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விழுப்புரத்தில் பரபரப்பு செல்போன் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்  சர்வீசுக்கு பணம் கேட்டதால் வெறிச்செயல்  2 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Ansari ,Zakir Hussain ,Ka. Kuppam ,Rediyar Mill ,East Pondy Road… ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்