×

சென்னை விமான நிலையத்தில் ரன்வே பராமரிப்பு பணிக்காக ரூ.1.31 கோடியில் அதிநவீன வாகனம்: இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கியது

மீனம்பாக்கம்: தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் அனைத்து விமான நிலையங்களுக்கும் 2 அதிநவீன ரன்வே பராமரிப்பு வாகனங்கள் இருந்த நிலையில், விமான போக்குவரத்து அதிகரித்து வருவதால், சென்னை விமான நிலையத்திற்கு கூடுதலாக ஒரு ரன்வே பராமரிப்பு அதிநவீன வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், கடந்த 8ம்தேதி மும்பையில் இருந்து புறப்பட்டு தரையிறங்கிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஓடுபாதையில் உராய்ந்தபடி சென்று விபத்தில் இருந்து தப்பியது. இதையடுத்து டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் எனப்படும் டிஜிசிஏ இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது. டிஜிசிஏ குழுவினர் நடத்திய விசாரணையில், சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ரன்வேக்களிலும் விமானங்கள் தரையிறங்கும்போது கிரீப்பிங் என்ற உராய்வு தன்மைகுறைவாக இருப்பதால் தரையிறங்கும் விமானத்தின் சக்கரங்கள், சறுக்கிகொண்டு ரன்வேயில் ஓடுவதால் இது போன்ற சம்பவம் நடந்தது தெரியவந்தது.

வானில் பறக்கும் விமானங்கள் படிப்படியாக உயரத்தை குறைத்து 250 அடி உயரத்திலிருந்து ரன்வேயில் தரையிறங்கி ஓடும்போது விமானத்தின் டயர்கள் ரன்வேயில் உராய்ந்து டயரில் உள்ள ரப்பர் பிசுறுகள் ரன்வேயில் படிந்துவிடும். இவ்வாறு ரன்வேயில் படியும் ரப்பர் பிசிறுகளை வாரத்தில் ஒருநாள், ரன்வே பராமரிப்பு நாளில் அகற்றுவார்கள். இதற்கு முன்னதாக ரன்வேயில் பிசிறு திண்டுகள் எந்த இடத்தில் அதிகம் சேர்ந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கு சிறப்பு கருவி பொருத்தப்பட்டுள்ள உராய்வு தன்மை பரிசோதனை வாகனத்தை ஓடுபாதையில் 65 முதல் 95 கிமீ வேகத்தில் இயக்கி ரப்பர் திண்டுகளை கண்டுபிடிப்பார்கள். இதற்கான வாகனம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களுக்கு 2 வாகனங்கள் மட்டுமே இருந்தன. இதுபோதுமானதாக இல்லாமல் இருந்ததால் சென்னை விமானநிலையத்திற்கு மட்டும் தனியாக ஒரு வாகனம் வழங்கவேண்டும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி இந்திய விமான நிலைய ஆணையம், ஏர்போர்ட் சர்பேஸ் பிரிக்டன் டெஸ்டர் வாகனங்கள், 8 புதிதாக வாங்கியுள்ளன. இதில் சென்னை விமான நிலையத்திற்கு ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் 400க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்கள் மற்றும் சரக்கு, தனி விமானங்கள் என 450க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் 2 வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. இவை சென்னை தவிர்த்து மற்ற விமான நிலையங்களின் ரன்வே பராமரிப்பு பணிக்கு செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

சென்னை விமான நிலைய ரன்வே பராமரிப்புக்கு புதிதாக ரூ.1.31 கோடியில் ஏஎஸ்எப்டி வாகனம் வழங்கி, செயல்பாட்டுக்கு வந்துவிட்டதால், சென்னை விமானநிலையத்தில் ரன்வே பராமரிப்பு பணி முழு வேகத்தில் நடக்கும் என்றும், இனிமேல் விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி ஓடும்போது ரன்வேயில் சறுக்கிக்கொண்டு ஓடுவதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்றும் கூறப்படுகிறது.

The post சென்னை விமான நிலையத்தில் ரன்வே பராமரிப்பு பணிக்காக ரூ.1.31 கோடியில் அதிநவீன வாகனம்: இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Airports Authority of India ,Meenambakkam ,South India ,Chennai… ,Dinakaran ,
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...