×

அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளை தொழிலதிபராக மாற்றிய இளம் பெண்!

நன்றி குங்குமம் தோழி

மதுரையில் 1953ம் ஆண்டு துவங்கப்பட்டது ‘கணேச விலாஸ்’ கடலை மிட்டாய். கடந்த 72 வருடங்களாக மூன்றாவது தலைமுறையினராக நிர்வாகப் பொறுப்பில் இணைந்துள்ளார் மோகனஹர்ஷினி. இவர் குடும்பத் தலைவிகள் வருமானம் பெறும் வகையில் தன் நிறுவனத்தில் பல திட்டங்களை அமைத்துள்ளார்.

‘‘பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டுதான் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றேன். 1953ல் பாட்டி சங்கரேஸ்வரி அவர்கள்தான் வீட்டில் கடலை மிட்டாய் செய்ய ஆரம்பித்தார். பாட்டி செய்து தருவதை தாத்தா கணேசன் சைக்கிளில் மிட்டாய்களை டப்பாக்களில் வைத்து மதுரையை சுற்றியுள்ள பகுதியான வாடிப்பட்டி, சமயநல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும் சென்று விற்பனை செய்ய துவங்கினார். அப்படித்தான் கணேச விலாஸ் கடலை மிட்டாய் ஆரம்பமானது.

தாத்தா இப்போது இல்லை. ஆனால் பாட்டி தன் 85 வயதிலும் எங்களை வழிநடத்தி ஆலோசனை வழங்கி வருகிறார். எங்களுடையது கூட்டுக் குடும்பம் என்பதால், அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, சித்தப்பா என அனைவரும் இந்தத் தொழிலினை ஒன்றாக இணைந்து நிர்வகித்து வருகிறோம். சொல்லப்போனால் அனைவரும் ஒவ்வொரு பொறுப்பினை ஏற்று செயல்பட்டு வருகிறோம். நான் இந்த நிர்வாகப் பொறுப்பில் கடந்த இரண்டு வருடமாகத்தான் செயல்பட்டு வருகிறேன்.

எங்களின் கடலை மிட்டாயை மிகவும் தரமான வெல்லத்தில்தான் செய்கிறோம். உடலுக்கு ஆரோக்கியம்… அதே சமயம் நாவிற்கு சுவை தருவதால், பலரின் விருப்ப ஸ்நாக்ஸாக இருக்கிறது. கடலை மிட்டாய் மட்டுமில்லாமல் கேண்டி, கொக்கோ மிட்டாய், பொடி வகைகள் என 140 பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். நான் பொறுப்பு ஏற்ற பிறகு விற்பனையை மேலும் உயர்த்த நிறைய வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இல்லத்தரசிகளை சந்தித்துப் பேசினேன். விருப்பமுள்ளவர்களை எங்களின் விற்பனை ஏஜன்டாக மாற்றினேன். அவர்கள் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்களின் பொருட்களை விற்பனை செய்தால் அதற்கான வருமானம் அவர்களுக்கு கிடைக்கும் படி செய்தேன். பொருட்களை நாங்க வழங்கி விடுவோம்.

மேலும் இதன் மூலம் அவர்களுக்கும் வருமானம் கிடைப்பதால் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். எங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. மேலும் இது போன்ற குடியிருப்புகளில் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும் நேரத்தில் ஸ்டால்கள் அமைத்து எங்கள் தயாரிப்புகளை அதில் இடம் பெறச் செய்வதன் மூலமாகவும் அவர்களுக்கு ஒரு வருமானத்தை அமைத்து தர முடிகிறது. கார்ப்பரேட் மட்டுமில்லாமல் திருமணம், பிறந்த நாளுக்கு என தனிப்பட்ட கிஃப்ட் பேக்கிங்கும் எங்களிடம் உள்ளது.

எல்லாவற்றையும் விட குறிப்பிட்ட சில திருமணங்களில் பருப்பு தேங்காய் முக்கோண வடிவத்தில் சம்பிரதாயமாக வைப்பது வழக்கம். அதனையும் நாங்க சிறப்பாக செய்து தருகிறோம்’’ என்றவர், கருப்பட்டி கடலை மிட்டாய், கடலை உருண்டை, கொக்கோ மிட்டாய், பெப்பர் கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி கடலை உருண்டை, தேங்காய் பர்பி, கமர்கட், நெய் கொக்கோ பொரி உருண்டை, மிக்சர் வகைகள், சேவு, முறுக்கு, தேங்காய் லட்டு என பல சுவையான ஸ்நாக்ஸ்களை வழங்கி வருகிறார்.

‘‘சில வருடங்களுக்கு முன் என் அண்ணனின் திருமண பந்தியில் கடலை மிட்டாய் பரிமாறினோம். பொதுவாக வீட்டில் அந்த தலைமுறையில் நடைபெறும் கடைசி திருமணத்தில்தான் கடலை மிட்டாய் பரிமாறுவார்கள். நான் அதை மாற்ற நினைத்தேன். திருமணத்திற்கு வந்தவர்கள் நான் செய்த செயலை குற்றமாக பேசினார்கள். அதன் பின் பந்திக்கு கடைசியில் கடலைமிட்டாய் வழங்க வேண்டும் என்றுதான் பெரியவர்கள் சொன்னார்கள், நாம்தான் தவறாக பின்பற்றி வருகிறோம் என்று புரிய வைத்தேன். ஒரு புதிய மாற்றத்தை செயல்படுத்தியதில் மகிழ்ச்சியாக இருந்தது.

தற்போது நேரடியாக மட்டுமில்லாமல் ஆன்லைன் முறையிலும் விற்பனை செய்கிறோம். அதே சமயம் போபால், பூனா, பெங்களூரூ மற்றும் தமிழ்நாடு முழுக்க ஆன்லைன் விற்பனையை அதிகரிக்க உள்ளோம். இதனைத் தொடர்ந்து பிரான்சிசைஸ் முறையில் எங்களின் விற்பனையை மற்ற மாவட்டங்களிலும் துவங்க திட்டமிட்டிருக்கிறேன்’’ என்றார் இளம் பெண் தொழிலதிபரான மோகனஹர்ஷினி.

தொகுப்பு: விஜயா கண்ணன்

 

The post அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளை தொழிலதிபராக மாற்றிய இளம் பெண்! appeared first on Dinakaran.

Tags : Kungumam Dozhi ' ,Ganesha Vilas' ,Madurai ,Mohanaharshini ,
× RELATED சரியான அளவு மற்றும் நுட்பங்களை...