×

பெண் தெய்வங்கள்

நன்றி குங்குமம் தோழி

சக்தி வழிபாடு என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை மிகவும் தொன்மையானது. ஆண் தெய்வங்களுக்குச் சமமாக உரிய மரியாதையையும், வழிபடுதலையும் கொண்டிருக்கின்றன அத்தெய்வங்கள். பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் நாகரிகம்தான் இத்தகைய வழிபாடாகவும் மாறியிருக்கிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர், தன் மனைவியான சாரதா தேவியாரை மலரால் அர்ச்சித்து பூஜை செய்திருக்கிறார்; ‘என் அன்னை, பராசக்தி’ என்றும் உள்ளம் உருகப் போற்றியிருக்கிறார்.

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும், ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ (இப்போது மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்றும் சொல்லலாம்!) என்றெல்லாம் தாய்மையின் இயல்பான பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நம் நாட்டில் பரவலாகப் போற்றப்பட்டும் வருகிறது. இயற்கையில் சக்தியை அடையாளம் கண்டு கொண்டு வழிபடும் பாரம்பரியம் நமக்குண்டு. கங்கை, யமுனை, காவிரி, கோதாவரி என்று நதிகளுக்கும் நாம் பெண் பெயரைச் சூட்டியே கௌரவித்து வருகிறோம்.

இவ்வாறு நதிகளுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டியிருப்பது, ஒரு நாட்டின், அதன் ஒவ்வொரு வீட்டின் வளமும், நலனும் பெண்களால்தான் மேம்படுகிறது என்ற உண்மையை வலியுறுத்துவதாகத்தானே அமைகிறது! பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, காற்று, வானம், பூமி ஆகியவற்றை வணங்கி வந்த ஆதி மனிதன் மரம், செடி, கொடி, மலை என்று எல்லா இயற்கை வடிவங்களிலும் பெண்மையையும், தாய்மையையும் போற்றி வணங்க ஆரம்பித்தான். இவ்வாறு இயற்கையை வழிபடுவதில் ஆரம்பித்து சிறு பெண் தெய்வ வழிபாடு, கிராமப்புற பெண் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு என்றெல்லாம் இன்றளவும் பெண் தெய்வங்களை நாம் போற்றி வழிபடுகிறோம்.

ஆக, பெண் தெய்வ வழிபாட்டை எந்த வகையிலும் தாழ்ச்சி சொலல் பாவம்! ஏனென்றால், அது தாய்மைக்கு நாம் காட்டும் மரியாதை. நம்மை அரவணைக்கும் இயற்கைக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன். பிரம்மனும் சரி, பரமேஸ்வரனும் சரி, மஹாவிஷ்ணுவும் சரி, அந்தப் பெண்மைக்கு, உரிய அங்கீகாரத்தை அளித்திருக்கிறார்கள். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை ஏற்றிருக்கிறார்; சிவபெருமான் தன்னில் ஒரு பாகத்தை உமையம்மைக்குக் கொடுத்து அர்த்தநாரீஸ்வரரானார்; திருமாலும் தன் மார்பில் மஹாலட்சுமியைத் தாங்கியபடி லட்சுமி நாராயணராக விளங்குகிறார்.

புராணங்களைப் பார்க்கும்போது பல கட்டங்களில் பெண்களை முன்னிறுத்தி, அவர்களால் பல அசுர வதங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வரும். அதனாலேயே அந்தப் பெண் தெய்வங்கள் மிகுந்த மரியாதையுடன் வழிபடப்படுகிறார்கள். அதேசமயம், கிராமங்களில் இப்போதும், பெண் தெய்வத்துக்குத் தனிச் சிறப்பு வாய்ந்த, தனித்துவமாகச் சொல்லப்படக்கூடிய வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புராணங்களைத் தவிர்த்துப் பார்த்தால், எந்தப் பெண்களெல்லாம் தெய்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்? கற்புக்கு அணியாய் விளங்கியவள், தன் குலம் தழைக்கவும், ஊர் நலனுக்காகவும் தன்னையே தியாகம் செய்தவள், குடும்ப தெய்வமாக வழிபடப்படும் அந்தக் குடும்பத்தின் மூதாதையராக விளங்கியவள், ஏன், குழவிக் கல்லும்கூட அம்மனாகக் கொண்டாடப்பட்டிருக்கிறதே!தமிழகத்தின் கருமாரி அம்மன், கேரளத்தின் பகவதி அம்மன், கொல்கத்தா காளி, மும்பை மஹாலட்சுமி, கர்நாடக கொல்லூர் மூகாம்பிகை, ஆந்திர கனகதுர்க்கை, காசி அன்னபூரணி என்று பல தெய்வங்கள், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரபலமாகவும், பூஜித்தலுக்கு உரியனவாகவும் விளங்குகின்றன.

பெண் தெய்வத்தின் சிறப்பை மேலும் ஓங்கச் செய்யும் வகையில் நம் நாட்டில் மொத்தம் 51 சக்தி பீடங்கள் அமைந்திருக்கின்றன. நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த சக்தி பீடக் கோயில்கள், பெண் தெய்வம் என்ற சக்தி, பரவலாக, எல்லா மொழி மக்களாலும் வணங்கப்படுகிறாள் என்பதை உறுதி செய்கின்றன. ஆதிகாலத்தில், சனாதன தர்மத்தில் இறை வழிபாட்டு நெறிகள் பலவாறாகச் சிதறிக் கிடந்தன.

அவற்றையெல்லாம் ஆறு பகுதிகளாகத் தொகுத்தார் ஆதிசங்கரர். இதன்படி, சிவ வழிபாடு, சைவம் என்றும் திருமால் வழிபாடு வைணவம் என்றும், விநாயகர் வழிபாடு கணாபத்யம் என்றும், சக்தி வழிபாடு சாக்தம் என்றும், முருகன் வழிபாடு கௌமாரம் என்றும், சூரிய வழிபாடு சௌரம் என்றும் வழங்கப்பட்டன. இந்த ஆறு தொகுதிகளில், சாக்தம் என்று சக்தி வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை கவனிக்க வேண்டும். அதாவது, பிற ஐந்து இறை வழிபாடுகளுக்குச் சமமானது அது என்று அவர் நிர்ணயித்திருக்கிறார்.

அதனால்தான், தன் தாய் இந்தப் பூவுலகை நீத்தபோது, வெகு தொலைவில் யாத்திரை மேற்கொண்டிருந்த ஆதிசங்கரர், விவரம் கேள்விப்பட்டு, உடனே வந்து, தன் துறவு நெறிகளையும் மீறி, தானே முழுமையான இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார். அந்தளவுக்கு தாய்மையை – சக்தியை அவர் போற்றினார். அவர் விஜயம் செய்த பல திருத்தலங்களில் – காசி முதல் காஷ்மீர் வரை – பல கோயில்களில் அம்பிகை சந்நிதியில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்தார். அதன் மூலம் அந்தப் பகுதியில் சக்தியின் அருள் பரிபூரணமாக நிலவுவதற்கு வழிவகை கண்டார்.

மனித வரலாற்றின் துவக்கத்திலிருந்தே, வேத காலத்திலிருந்தே, பெண்மையைப் போற்றும் பண்பாடு நம் நாட்டில் சிறந்தோங்கி இருக்கிறது. மனிதரைப் பிறப்பிக்கும் ஆற்றல், சக்தி கொண்டவள் பெண் என்ற உண்மை அப்போதிருந்தே உணரப்பட்டு, அதற்குரிய அங்கீகாரமும் அளிக்கப் பட்டிருக்கிறது. அது தெய்வத்துக்கு ஒப்பான மரியாதை. அதன் தொடர்பாகவே அந்தத் தாய்மையை, சக்தியை இறை அம்சமாகவே வழிபடும் முறையும் உருவானது.

இந்தத் தொன்மைமிகு பாரம்பரியத்துக்கு, கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சிப் படிமங்கள், சங்க காலப் பாடல்கள் என்று பல ஆதாரங்கள் உள்ளன. ஆதிச்சநல்லூரில் உலோகத்தால் ஆன சிறிய பெண் உருவம் கிடைத்திருக்கிறது. அது அந்நாளில் தெய்வமாக வணங்கப்பட்ட வடிவம் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. வெளிப்புறத்தில் பெண் தெய்வ உருவங்கள் பொறிக்கப்பட்ட தாழிகளும் அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை மற்றும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய இயக்கங்களுக்கும் சக்தியே ஆதாரம். ‘தேவி பாகவதம்’ என்ற சக்தி வழிபாட்டு ஸ்தோத்திரம், தேவியை ‘பராசக்தி’ என்று வர்ணிக்கிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் படைத்தவள் சக்தியே. தன்னுடைய அம்சமாக சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என்ற பெண் தெய்வங்களைப் படைத்தவளும் சக்தியே. படிப்புத் தொழில் மேற்கொண்டிருக்கும் பிரம்மாவுக்கு சரஸ்வதி, காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவுக்கு லக்ஷ்மி, அழித்தல் தொழில் புரியும் ஈசனுக்கு பார்வதி என்று மூன்று ஜோடிகளாக இணை சேர்த்து வைத்தாள் சக்தி. இது மட்டுமன்றி, தனிப்பட்ட முறையிலும் பல்வேறு உலக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். இதனால்தான் நாடெங்கும் பல தலங்களில் சக்தி பலவித உருவங்களில் வழிபடப்படுகிறாள்.

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் பெண் தெய்வ வழிபாடு பரவலாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த காப்பியத்தின் பிரதான நோக்கமே, கண்ணகியை பத்தினி தெய்வமாக உயர்த்திச் சொல்வதுதான். தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவள் இந்த வீரப்பெண். அவ்வாறு எதிர்ப்பைக் காட்டுவது ஒரு மன்னனுக்கு எதிராக என்றாலும், கொஞ்சமும் தயக்கமோ, பின்வாங்குதலோ இல்லாமல் எதிரெதிர் நின்று கம்பீரமாக, கணீரென்று கேள்விக் கணைகளைத் தொடுத்தாள். அந்தக் கண்ணகிக்கு இளங்கோவடிகளும், மன்னன் சேரன் செங்குட்டுவனும் கோயில் நிர்மாணித்திருக்கிறார்கள்.

தமிழ் நாட்டுப் பெண்ணான கண்ணகிக்கு இங்கு மட்டுமல்லாமல், இலங்கையிலும் அப்போதைய மன்னன் கயவாகு கோயில் எடுப்பித்திருக்கிறான், அவளுடைய புகழைப் போற்றியிருக்கிறான். இந்த விவரங்களால் சக்தியின் பெருமையும், அன்னை உரிய மரியாதை பெற்றதையும் அறிய முடிகிறது. கண்ணகி கோயிலில் தேவந்திகை என்ற பெண் பூசாரி ஒருத்தி இறைப்பணி ஆற்றியிருக்கிறாள் என்ற கூடுதல் தகவல் பெண்மையின் தெய்வீகச் சிறப்பை உணர்த்துகிறது.

பூசாரி, அர்ச்சகர், பட்டர் என்று கோயில்களில் ஆண்கள் பொறுப்பேற்றதைப் போல பெண் பூசாரியும் அந்தப் பணியில் பங்கேற்றதிலிருந்து பெண்மை போற்றுதலுக்குரியதாகவே விளங்கியிருக்கிறது என்பது புலனாகிறது. கண்ணகி தவிர, கொற்றவை, சப்தமாதர் போன்ற பெண் தெய்வங்களும் மக்களுக்கு அருள் வழங்கியிருக்கின்றன என்ற தகவலும் குறிப்பிடத்தக்கது.

இன்று சிவன் கோயில்களில் அம்பிகை என்றும், பெருமாள் கோயில்களில் தாயார் என்றும் தனித்தனி சந்நிதிகளில் தரிசனம் நல்கும் சக்தியை நாம் வழிபடுகிறோம். அதேசமயம் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி போன்று அம்பிகைகளுக்குத் தனியே கோயில் என்ற வகையில் சிறப்பு செய்யப்பட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். இவ்வாறு சிறப்பு முக்கியத்துவம் கொண்டிருக்கும் சில சக்தி திருத்தலங்களை இந்தத் தொடரில் நாம் அடுத்தடுத்து தரிசிப்போம்.

(தொடரும்!)

தொகுப்பு:பிரபுசங்கர்

Tags : Atheyvas ,Ramakrishna Paramahamsar ,
× RELATED என்னை ஆட்கொண்ட தொல்காப்பியம்!