நன்றி குங்குமம் தோழி
‘‘ஒருவரை வாழ்க்கையில் தோற்கடிப்பது அவருக்கு வந்த நோயல்ல… ‘எனக்கு ஏன் இப்படி நடந்தது?’ என்கிற சுய பச்சாதாபக் கேள்வியில்தான் பலரும் அடிபடுறாங்க’’ என்கிறார் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சுகுணா முத்துச்சாமி. புற்றுநோய் என்கிற மிகப்பெரிய நோயின் தாக்கத்தை உடலாலும், மனசாலும் முழுமையாக அனுபவித்து மீண்டவர் இவர். நோயிலிருந்து வெளிவந்த பிறகு, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தன் கணவர் முத்துச்சாமியுடன் இணைந்து இயற்கை முறை வேளாண்மை செய்து வருவதுடன், நோய் தீர்க்கும் மூலிகைச் செடிகளுடன் முள் சீத்தா, அத்தி, வாழை, கொய்யா, நெல்லி, பலா மரங்களை ஏக்கர் கணக்கிலும் நட்டு வளர்த்து வருகிறார்.
தனது தோட்டத்தில் விளைவதை சுகுணா அம்மா விற்பனை செய்வதில்லை. குறிப்பாக முள் சீத்தா, அத்தி போன்ற பழங்களை கேன்சர் நோயாளிகளுக்கு இலவசமாகக் கொடுப்பதுடன், தேவைப்படுவோர், இவரின் தோட்டத்திற்கு நேரடியாக வந்து மூலிகை, நெல்லி, முள் சீத்தா மற்றும் அதன் இலைகளை பறித்தும் செல்கின்றனர்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, அன்பு உள்ளங்கள் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, சனிக்கிழமை தோறும், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் நின்று, நோயாளிகளுக்கு சத்தான நோன்பு கஞ்சியை ஊற்றி வரும் சுகுணா முத்துச்சாமியின் தன்னலமற்ற சேவைகள் குறித்து விரிவாகப் பேசியதில்…
‘‘எல்லா வகை புற்றுநோய் சிகிச்சையும் ஒன்று கிடையாது. புற்று நோயின் வகை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான சிகிச்சை முறைகளும் மாறுபடும். எனக்கு வந்தது ட்ரிப்பிள் நெகட்டிவ் எனச் சொல்லக்கூடிய அரிதான அபாயகரமான நான்காம் நிலை மார்பகப் புற்றுநோய். இது வேகமா பரவக்கூடியது. லட்சத்துல ஒருத்தருக்குதான் வரும்’’னு மருத்துவர்கள் சொன்னதை நம்மிடம் குறிப்பிட்டவர், இதற்கான சிகிச்சையும் தீவிரமாகவே இருந்தது என்கிறார்.
‘‘அந்த நாட்களை நினைச்சுப் பார்க்கவே எனக்கு பயமாக இருக்கு. என்னைச் சுற்றி ஏதோ பெரிய விபரீதம் நடக்கப் போகுதுன்னு பயம் முழுதாய் ஆட்கொண்டது. முதலில் அறுவை சிகிச்சையில் என் வலது மார்பகத்தை முழுசா நீக்குனாங்க. வலியோட உச்சத்தில் ‘நல்லா இருக்கிற இன்னொரு மார்பகத்தையும் எடுத்துடுங்க’ன்னு மருத்துவரிடம் அழுதேன்’’ என்றவர், ‘‘கீமோ தெரபி மருந்து உடம்புக்குள் போறதே எனக்குப் போராட்டம்தான். ஏன்னா மருந்து ஏற்ற நரம்பு (vein) சரியாகக் கிடைக்காது. கீமோ எடுக்கும் அன்றும், அடுத்து வருகிற மூன்று நாட்களும் வலி அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு 20 முறை வாந்தி, 40 முறை பேதி என 15 நாளைக்கு பக்க விளைவுகள் பாடாய்ப்படுத்தும்’’ என பழைய நினைவுகளுக்கு திரும்பி வேதனையோடு விவரித்தார்.
‘‘கீமோவில் நரம்பு வழியே சொட்டு சொட்டாய் மருந்து ஏறி முடிய ஒரு நாள் எடுக்கும். ரேடியோ தெரபியில், பெரிய மெஷின் முன்பு நம்மை படுக்க வைத்து, கட்டி இருக்கும் இடத்தில் ஸ்னைப்பர் தாக்குதல் மாதிரி, சில வினாடிகள் கதிர்வீச்சை செலுத்துவாங்க. கீமோதெரபி ஊர் முழுக்க வெள்ளத்தைப் பாச்சுற முறைன்னா, ரேடியோ தெரபி எதிரி இருக்கும் இடத்தைக் குறி வைத்து தாக்குவது. இரண்டுமே புற்றுநோய் செல்களை அழிக்கும் போது நம் உடம்பில் உள்ள நல்ல செல்களையும் சேர்த்தே அழிக்கிறது. அதில்தான் உடம்பு பலவீனமாகி, முடி கொட்டுவது நிகழும். நம்மைக் காப்பாற்றும் மருந்தே, நம்மைப் பலவீனப்படுத்துறதுதான் இதில் இருக்கும் முரண்பாடே.
உடல் ரீதியான வேதனை ஒரு பக்கம் என்றால், தலைமுடி, புருவம் தொடங்கி உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்து தோற்றமே மாறியது. இது என் தன்னம்பிக்கையை சிதைக்க, இந்த நாட்களில் உடம்புல நடக்கிற போராட்டத்தைவிட, மனசுல நடக்கிற போராட்டம் வலியதாக இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போனதில் ஒரு வருடம் வீட்டுக்குள்ளேயே முடங்கினேன். பம்பரமாய் சுழன்றவள் நான்கு சுவற்றுக்குள் முடங்கியது நரகமாக இருந்தது.
இவ்வளவு வலிகள், குழப்பங்களுக்கு நடுவிலும் நம் மனசுல வருகிற பெரிய பூதம் மரண பயம். அந்த பயம் என்னைப் பற்றியது மட்டுமல்ல… என் அன்பானவங்களோட எதிர்காலத்தைப் பற்றியது. இந்த நிலையில் எனக்கு வந்த பயத்தை எரிபொருளாய் மாற்றி, வாழ்வதற்கான பிடிப்பைத் தேட ஆரம்பித்தேன். இந்த நகர்தலுக்கு தேவைப்படுகிற பலத்தை கொடுத்தது என் குடும்பம் மொத்தமும் மற்றும் எனது நண்பர்களும்தான்.
சில போராட்டங்கள் நம் வாழ்க்கையில் ஏன் வந்தது என்ற கேள்வியை கேக்குறதைவிட, அந்தப் போராட்டத்தோட இடிபாடுகளில் இருந்து நாம எதைக் கட்டமைக்கப் போறோம் என்பதுதான் முக்கியமானது. புற்றுநோய் என்னிடமிருந்து எதையெல்லாம் பறிச்சதோ, அதைவிட ஒரு படி மேலே அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்கினேன். சலிப்பில் இருந்து என்னை மீட்டெடுத்து, உடுமலைப்பேட்டையில் இருந்த எங்கள் 20 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். பழைய காலத்து வீட்டை புதுப்பிச்சு அங்கேயே வாழத் தொடங்கினேன்.
எனது குறைகளை ஒதுக்கிவிட்டு, ரத்தசாலி அரிசி, கவுனி அரிசி, சிறுதானியங்கள், கஞ்சி, காய்கறிகள், பழங்கள், நட்ஸ் என சத்தான பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பினேன். இது வெறும் உணவுப் பழக்க மாற்றமில்லை… என் உடலுக்குள் தூய்மையான சூழலை உருவாக்குகிற முயற்சி. அத்துடன் உடற்பயிற்சி, யோகா என உடலையும், மனசையும் கூடுதல் பலத்துடன் இணைத்தேன். என்னை சுற்றிலும் தூய்மையான, தன்னிறைவான உலகத்தை உருவாக்குவதன் வழியாக, என் உடலுக்குள்ளேயும் அந்தத் தூய்மையையும் வலிமையையும் கொண்டுவர முடியும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடே இவை’’ என்கிறார், சுகுணா அழுத்தமாக.
இயற்கை விவசாயம், சுத்தமான காற்று என முற்றிலும் வேறொரு தளத்துக்கு வாழ்க்கையை நகர்த்தியவர், இன்று பயிர்களுக்குத் தேவையான இயற்கை மண்புழு உரம் தயாரிப்பதில் தொடங்கி, 13 வகையான நாட்டு வாழை, 12 வகையான நாட்டு கொய்யா, மாதுளை, அத்தி என பாரம்பரிய ரக மரங்களை நட்டுவைத்து, முழுமையான பண்ணை ஒன்றை தனது கணவர் முத்துச்சாமியுடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார். அத்துடன் புற்று நோயாளிகளுக்கு நூற்றுக்கணக்கான முள் சீத்தா மரங்களை நட்டுவைத்து, அதில் விளைகிற பழங்களை இலவசமாகக் கொடுப்பதை சேவையாகச் செய்து வருகிறார்.
தனக்கு நோய் இருந்த சமயத்தில், புற்றுநோய்க்கான எதிர்ப்பு சக்தி தருகிற முள்சீத்தா பழம் கிடைப்பது அரிதாக இருக்க, கஷ்டப்பட்டு தேடி, ரெண்டே ரெண்டு பழம் மட்டுமே பெற்றதை பகிர்ந்தவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்ள கேன்சர் நோயாளிகளுக்காக, 360 கிலோ முள் சீத்தா பழங்களை, ஒரே நேரத்தில் அனுப்பி வைத்ததை நினைவுகூர்ந்தார். ஒருவகையில் சுகுணா செய்வது, ‘தனக்கு அரிதாய் கிடைத்த ரெண்டு பழங்களுக்கு பதிலாய், நூற்றுக்கணக்கில் விளைவித்து, அதை திருப்பி கொடுப்பேன்’ எனச் சொல்கிற மாதிரியான, நோய்க்கு எதிரான போர் பிரகடனமே இது.
‘‘ஒருசிலர் பழங்களுக்கு அன்பளிப்பாய் கொடுக்கின்ற பணத்தை ஏற்று, அன்பு உள்ளங்கள் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் சத்தான நோன்பு கஞ்சியினை ஊற்றி வருகிறேன்’’ என்றவர், ‘‘இதில் கஞ்சியை காய்ச்சுவது இஸ்லாமிய நண்பர். ஆட்டோவில் கொண்டு வந்து என்னிடத்தில் சேர்ப்பது கிறிஸ்தவ நண்பர். மதம், ஜாதி கடந்து மனிதன் மட்டுமே இங்கு முன் நிற்கும்’’ எனப் புன்னகைக்கிறார்.
சுகுணா அம்மா செய்வது, ‘நீ என்னை வீழ்த்த நினைச்ச… ஆனால், நான் உன்னை வைத்து ஒரு பெரிய கூட்டத்துக்கே உதவி செய்கிறேன் பார்’ எனச் சொல்கிற மாதிரி, தனக்குத்தானே சொல்லிக் கொள்கின்ற உறுதி மொழி. ‘‘இப்ப எனக்கு 68 வயது. நோய் வந்துட்டுப் போயி 15 வருடத்திற்கும் மேல ஆச்சு. 110 வயது வரை இருந்துட்டுதான் போவேன்’’ எனப் புன்னகைத்தவர், ‘‘நோயை வெல்வது என்பது, மருத்துவ சிகிச்சையை தாண்டிய மிக நீண்டப் பயணம். அது உடலை மட்டும் குணப்படுத்துற விஷயமில்லை. மனதையும் வாழ்க்கையையும், சில சமயம் நம் சமூகத்தையும் சேர்த்தே குணப்படுத்துகின்ற செயல். குணமடைதல் என்பது சிகிச்சைப் பெறுவது மட்டுமல்ல, அர்த்தமுள்ள வாழ்க்கையை திரும்ப கட்டமைப்பது’’ என்கிறார் தனது செயல்களின் வழியாக.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: சதீஷ் தனபாலன்
