நன்றி குங்குமம் தோழி
‘செய்வன திருந்த செய்’ என்பதற்கேற்ப இன்றைய நவீன காலத்தில் தங்களுக்கேற்ற வித்தியாசமான துறைகளை தேர்வு செய்து, பல்வேறு சவால்களை சந்தித்து, நவீன திட்டங்களை சிறப்பான வகையில் நடைமுறைப்படுத்தி, அதில் பல புதுமைகளை புகுத்தி வெற்றி கண்டு வருகிறார்கள் இன்றைய புதுமை பெண்கள்.
அந்த வகையில் விளம்பர மேலாளர், ஆசிரியர், விரிவுரையாளர், இன்ப்ளூயன்ஸர், நடனம் மற்றும் மாடலிங் தெரிந்தவர், பயிற்சியாளர், பிரபல கல்வி நிறுவனங்களின் சோஷியல் மீடியா பக்கங்களை கையாள்பவர், கன்டென்ட் ரைட்டர், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பர்சனல் பிராண்டிங் செய்பவர் என பல்துறை சார்ந்த அனுபவங்களை தன்னிடத்தில் கொண்டு பன்முகத் திறமையாளராக அசத்தி வருகிறார் சென்னை, வடபழனி பகுதியை சேர்ந்த பெண் தொழில்முனைவோர் சந்திரகாந்தா.
பெரிய முதலீடுகள் ஏதுமின்றி தனது தனித் திறமையினை மட்டுமே முதலீடாகக் கொண்டு, சொந்தமாக அதே சமயம் புதுமையாக ஒரு தொழிலை செவ்வனே நடத்தி வெற்றி காண்பது என்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை. இந்த வெற்றிகள் ஏதும் சாதாரணமாக கிடைத்துவிடவில்லை என்கிறார் சந்திரகாந்தா.
தொழில் அனுபவங்கள் குறித்து…
நான் எம்பிஏ பட்டதாரி. படித்து முடித்தபின் ஒரு இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் ரீஜினல் மேனேஜராக பணிபுரிந்து வந்தேன். அதன் பிறகு கல்லூரி விரிவுரையாளராக இருந்தேன். அதில் கிடைத்த அனுபவங்களை கொண்டு ஆன்லைன் டீச்சிங் செய்து வந்தேன். பிறகு சோஷியல் மீடியா மேனேஜ்மென்ட் செய்ய ஆரம்பித்தேன். அதில் ஒரு பொருட்களை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்வது என்று ஆராய்ந்து அந்த யுத்திகளை அறிந்து கொண்டேன். நான் ஏற்கனவே சோஷியல் மீடியாவில் ஈடுபட்டு வந்ததால், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அவர்களுக்கான சமூகவலைத்தள பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை தந்தார்கள்.
ஆலோசனை குழு அமைத்தது குறித்து…
‘காஃபி வித் கந்து’ என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கான புதிய குழு ஒன்றினை ஆரம்பித்து அவர்களுக்கு தேவையான டிப்ஸ்களை தினந்தோறும் வழங்கி வருகிறேன். சமூக வலைத்தளங்களில் கன்டென்ட் தயாரிப்பது முதல் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனையும் சொல்லி வருகிறேன். இதனை லாப நோக்கமற்ற விருப்ப பணியாக மட்டுமே செய்து வருகிறேன். தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு வழிமுறைகளை பற்றி ஆராய்ந்ததால், என்னால் அது சார்ந்த பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது.
தற்ேபாது என்னுடைய குழு மூலம் நாற்பத்தி இரண்டு தொழில்முனைவோர்கள் பலன் அடைந்து வருகின்றனர். அவர்களின் தொழிலை சிறப்பான முறையில் வளர்ச்சியடைய செய்ய முடிகிறது என்று அவர்கள் கூறும் போது மனதுக்கு நிறைவையும் ஆத்ம திருப்தியினையும் அளிக்கிறது. மேலும், சிலருக்கு பொருட்களை விற்பது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்த வீடியோக்களை கூட தயாரித்து அதில் வழங்கி வருகிறேன்.
எதிர்கால லட்சியங்கள்…
சமூக வலைத்தளங்கள் பல்வேறு வகைகளில் நம் தொழிலுக்கு உதவி வருகிறது. எதிர்காலத்தில் அதனை எவ்வாறு தொழில் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்த போகிறோம் என்பது முக்கியம். என் தொழில் அனுபவங்கள் பலருக்கும் பயன்படும் படி செய்ய வேண்டும். இளைய தலைமுறையினருக்கு சமூகவலைத்தள பக்கங்களை கையாள்வது, பர்சனல் பிராண்டிங் செய்வது, விளம்பரங்கள் மூலமாக தொழில் வளர்ச்சி காண்பது என்பது குறித்த பயிற்சி வகுப்புகள் எடுக்க இருக்கிறேன்.
ஏற்கனவே பல கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக எனக்கு தெரிந்த இந்திய சினிமா மற்றும் விளம்பர துறை குறித்த வகுப்புகள் எடுத்து வருகிறேன். இந்த அனுபவங்களையும் மற்றவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். தற்போது சினிமா துறை சார்ந்த விளம்பர உத்திகளை கையிலெடுத்திருக்கிறேன். அதனை சிறப்பாக செய்து முடித்து மேலும் பல புதிய திரைப்படத்திற்கும் வேலை செய்வதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறேன். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சோஷியல் மீடியா ஹண்டலிங் துறையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
தொழில்முனைவோர்கள் சமூக வலைத்தளங்களை திறமையாக கையாள்வதன் மூலமாக பயன் பெறுகிறார்களா..?
நிச்சயமாக. நான் இருக்கும் கல்வி துறையில் நிறைய கல்லூரி இயக்குநர்கள் தங்களை பர்சனல் பிராண்டிங் செய்வதால், வலிமையானவர்களாக உணர்வதாக சொல்கிறார்கள். அவர்களுக்கான சமூகவலைத்தள பக்கங்களை கையாள்வதோடும், யூனிக்கான விளம்பரங்களை செய்வது மட்டுமில்லாமல் அவர்களின் நடை உடை பாவனைகளையும் மாற்றித் தருகிறோம். அதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தொழிலிலும் வளர்ச்சியை காண்கிறார்கள்.
அதற்கு தனிநபர் விளம்பரமும் முக்கிய காரணம். தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் பொருட்களோடு தங்களையும் விளம்பரப்படுத்திக் கொள்வதுதான் அதீத பலன்களை தரும். குறிப்பாக பெண் தொழில்முனைவோர் சமூகவலைத்தளம் மூலம் தங்களை சிறந்த வகையில் மேம்படுத்திக் கொள்வதன் மூலமாக நல்ல தொழில் வளர்ச்சியை காண்கிறார்கள். பொருட்களை நேரிடையாக விளம்பரப்படுத்துவதை விட அது குறித்த நிறை மற்றும் குறைகளை விளக்கி வீடியோ போடுவதாலும் வாடிக்கையாளர்களை அதிகளவில் பெற உதவுகிறது. தொழிலும் அடுத்த கட்டத்தினை அடையும் என்று கூறும் சந்திரகாந்தா கற்பித்தலுக்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்றுள்ளார்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
