×

காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பன்முகத்தன்மையுடன் திறமையாக பணியாற்றி வரும் பெண்கள்

*எஸ்பி விவேகானந்த சுக்லா பேச்சு

வாலாஜா : அனைத்து துறைகளிலும் பெண்கள் பன்முகத்தன்மை மற்றும் திறமையுடன் பணியாற்றி வருவதாக எஸ்பி விவேகானந்த சுக்லா பேசினார்.ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ‘ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் பூங்குழலி வரவேற்றார். ராணிப்பேட்டை எஸ்பி விவேகானந்த சுக்லா தலைமை தாங்கி பேசியதாவது:

நமது நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பெண்களான அதிகாரம் ஆகியன அரசியல் சட்டத்தில் மிகவும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள், அதிகார மீறல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகியவற்றை கலைந்திட தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் மாநில பெண்கள் ஆணையம், அதேபோல் மனித உரிமை ஆணையம் ஆகியன சிறப்பாக செயல்படுகிறது.

இதன் அதிகாரங்களையும், அவற்றை எளிதாக அணுகுவது குறித்தும் மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதேபோல், மாணவிகள் நாளிதழ் படிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

இதில் பல்வேறு தகவல்கள் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமான நீதியும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெண்கள் பன்முகத்தன்மையுடன் திறமையுடன் பணியாற்றி வருகிறார்கள்.

குறிப்பாக பெண் போலீசார் தங்கள் குடும்பத்தை நன்கு பேணி காத்து வருகிறர்கள். அதேபோல் தாங்கள் பணி செய்யும் இடத்திலும் தனித்தன்மையுடன் திறமையுடன் பணியாற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள்‌. அரசியல் சட்டத்தில் வழங்கியுள்ள பெண்களுக்கான உரிமைகள், அவ்வப்போது ஏற்படும் சவால்களை சமாளிப்பது குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சாதியற்ற சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு குறித்து கல்லூரியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு எஸ்பி விவேகானந்த சுக்லா
சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தை தொழிலாளர் அகற்றம் திட்டத்தின் மூலமாக கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், குழந்தைகள் உரிமை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருளுக்கு அடிமையாகுதல் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

இதில், மாவட்ட துணை ஆட்சியர் அறிவுடை நம்பி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அனுசுயா, டிஎஸ்பி இமயவரம்பன், வாலாஜா நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை, புள்ளியியல் ஆய்வாளர் ரேகா, வாலாஜா தாசில்தார் அருள்செல்வம், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடகிருஷ்ணன், சாலமன்ராஜா, கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் குணசேகர், மேகலா, உதவி திட்ட மேலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பன்முகத்தன்மையுடன் திறமையாக பணியாற்றி வரும் பெண்கள் appeared first on Dinakaran.

Tags : SP ,Vivekananda Sukla ,Valaja ,Social Justice and Human Rights Division ,Ranipettai District Police Department ,Police Department of Women ,with Diversity ,
× RELATED திருச்சி அருகே வனப்பகுதியில் 2 ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிப்பு