×

தொட்டியம் அருகே இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டித்தர கோரி மறியல்

 

தொட்டியம், மார்ச் 25: தொட்டியம் அருகே இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டித்தரக்கோரி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் மல்லான் கோயில் அருகே ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 15 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் அருகில் இருந்த வாடகை கட்டிடத்தில் பாடம் படித்து வருகின்றனர். கிராம மக்கள் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டித்தருமாறு பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதையடுத்து நேற்று காட்டுப்புத்தூரில் முசிறி-காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காட்டுப்புத்தூர் போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post தொட்டியம் அருகே இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டித்தர கோரி மறியல் appeared first on Dinakaran.

Tags : Thottiyam ,Adi Dravidar Welfare Association ,ADHA ,Mallan Temple ,Kattuputhur ,Thottiyam, Trichy district ,
× RELATED லாட்டரி விற்றவர் கைது