×

தலைமைப்பொறியாளர் லஞ்ச வழக்கில் கைது புதுவை அமைச்சர் ராஜினாமா கோரி சபாநாயகர் முன் தர்ணா: எதிர்க்கட்சி தலைவர் குண்டுகட்டாக வெளியேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் அமைச்சர் ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக, காங்., எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, அவையில் இருந்து குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 2 நாள் விடுமுறைக்கு பின் நேற்று மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் சிவா எழுந்து, இந்தியா முழுவதும் புதுச்சேரிக்கு பெரிய தலை குனிவு ஏற்பட்டுள்ளது. தலைமை செயலருக்கு நிகரான பொறுப்பில் உள்ள தலைமைப்பொறியாளர் ரூ.7 கோடி பணிக்கு கமிஷன் என்ற அடிப்படையில் ரூ.2 லட்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் புதுச்சேரியே அதிர்ந்து போயுள்ளது. இதற்கு பொறுப்பேற்று துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆளும் அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் குறித்து சட்டசபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.

சபாநாயகர் செல்வம்: கேள்வி நேரம் முடிந்து விவாதிக்கலாம். இருக்கையில் அமருங்கள்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: அரசு இந்த பிரச்னையில் என்ன செய்யப்போகிறது. தலைமைப்பொறியாளர் அலுவலகமே பூட்டப்பட்டு யாரும் செல்லவில்லை. எங்கள் கேள்விகளுக்கு எப்படி பதில் தருவீர்கள். எனவே மிக முக்கியமான பிரச்னை, அவையை ஒத்தி வைத்து விவாதியுங்கள்.
சபாநாயகர் செல்வம்: நாடாளுமன்ற, சட்டமன்ற விதிகளின் படி கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க முடியாது. உங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும், அப்போது பேசுங்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, சம்பத், அனிபால் கென்னடி, செந்தில்குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர், சபை காவலர்களை அழைத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல.ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்டார். அவர்கள் எழுந்திருக்கவில்லை. இதனால் குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்ற உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சபைக்காவலர்கள், எதிர்க்கட்சி தலைவர் சிவாவை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வெளியேற்றினர். அவைக்கு தாமதமாக வந்த நாஜிம், நாக.தியாகராஜன் ஆகியோர் இப்பிரச்னையை மீண்டும் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

* பொதுப்பணித்துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளறுபடி
எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியதாவது: காரைக்காலில் ஒரு ஒப்பந்த பணிக்கு இவ்வளவு முறைகேடு நடந்திருக்கிறது. தலைமைப் பொறியாளரின் பணி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இதுதொடர்பாக துறை அமைச்சர் ராஜினாமா செய்யக்கோரி போராட்டம் நடத்துவோம். குறிப்பாக தரமாக இருந்த புதிய பஸ் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு மோசமான நிலையில் பல கோடி செலவு செய்துள்ளனர். பொதுப்பணித்துறை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தலைமைப்பொறியாளர் லஞ்ச வழக்கில் கைது புதுவை அமைச்சர் ராஜினாமா கோரி சபாநாயகர் முன் தர்ணா: எதிர்க்கட்சி தலைவர் குண்டுகட்டாக வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chief Engineer ,Puducherry Minister ,dharna ,Puducherry ,DMK ,Congress ,Opposition Leader ,Siva ,Speaker ,Puducherry Assembly ,Dinakaran ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்