×

மும்மொழி கொள்கையை திணிக்காதீர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் கடமலைபுத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் பொன்மலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 5000 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவியாக குக்கர் வழங்கப்படுகிறது. ஏனென்றால் இந்த குக்கரில் பருப்பு மட்டும்தான் வேகும். வடநாட்டுக்காரனுடைய பருப்பு வேகாது என சொல்லுகின்றவிதமாக, எங்களுக்கு இருமொழி கொள்கைபோதும். உங்களுடைய மும்மொழி கொள்கையை திணிக்காதீர்கள். 3வது மொழி படிக்க வேண்டும் என்று கூறும் ஒன்றிய அரசு, கர்நாடகாவில் சுமார் 90 ஆயிரம் பேர் இந்தி தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இதுபற்றி யாராவது பேசியுள்ளார்களா? மொழிப்போர் தியாகிகளை வாழ்நாள் முழுவதும் மறந்துவிடக்கூடாது. ஆகையால்தான் கலைஞர் மிகப்பெரிய அரசு கட்டிடத்திற்கு தாளமுத்து நடராசன் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தார்.

இதுபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தாளமுத்து நடராசனுக்கு உருவசிலை எழுப்புவோம் என்று சொல்லியிருக்கிறார். நம் பிள்ளைகளுக்கு தேவையானது அறிவியல் மொழிதான், 1996ம் ஆண்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இன்பர்மேஷன் டெக்னாலஜி என்ற கொள்கையை உருவாக்கியது கலைஞர். நமக்கு ஆங்கிலம் தேவை, தாய் மொழியாம் தமிழ் மொழியும் தேவை. நம் பிள்ளைகள் 30 மொழிகள்கூட படிப்பார்கள். ஆனால் எந்த மொழியையும் திணிக்காதீர்கள்’ என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் கோகுலகண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், பேரூர் செயலாளர் எழிலரசன், வழக்கறிஞர்கள் ரங்கநாதன், சம்பத் வெங்கா, முன்னாள் அவை தலைவர் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர்கள் வசந்தா, மாலதி, பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன், ஒன்றிய நிர்வாகிகள் ரத்தினவேலு, பார்த்தசாரதி, கருணாகரன், ரமேஷ், ராஜசேகர், சிவக்குமார், சிவா, விஜயா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பால சுப்பிரமணியன், பொற்செல்வி, மேகலா, பானுமதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் கண்ணன், பெரும்பேர்கண்டிகை ஊராட்சி தலைவர் சாவித்திரி சங்கர், ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர் சிவகுமார் மற்றும் ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள், இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

 

The post மும்மொழி கொள்கையை திணிக்காதீர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு appeared first on Dinakaran.

Tags : MINISTER ,AMIN MAKESH ,Madurandakam ,Kanchipuram Southern District Achirupakkam Southern Union ,Kadamalaiputur National Highway Area ,Mu. K. Stalin ,72nd Birthday Celebration General Assembly ,Kancheepuram Southern District ,Adiravidar Welfare Group ,Deputy ,Anbil Mahesh ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...