தர்மபுரி, மார்ச் 19: அரூர் அருகே வரட்டாறு அணையில் இருந்து, பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து, இன்று (19ம் தேதி) முதல் வரும் 27ம் தேதி வரை பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 11 ஏரிகளுக்கு, தொடர்ந்து 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதம் 51.840 மில்லியன் கனஅடி தண்ணீர் விட்டும், புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 14 ஏரிகளுக்கு 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதம் 51.840 மில்லியன் கனஅடி தண்ணீர் விட்டும், ஆக மொத்தம் 40 நாட்களுக்கு 5108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், 103.68 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பழைய ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகள் 5108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வரட்டாறு அணையில் இன்று தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.
