திருத்தணி: திருத்தணியில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் ஆகாயத்தாமரை மற்றும் கோரை புற்கள் சூழ்ந்துள்ளதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை உடனே அகற்றி நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி காந்தி ரோடு பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான நல்ல தண்ணீர் குளம் உள்ளது. இந்த குளம் காந்தி ரோடு, முருகப்பா நகர், கச்சேரி ரோடு, கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் பயன்பெற்று வந்தனர்.
நாளடைவில் இந்த குளம் மாசடைந்து, தூர்ந்து போய் வறண்டு போனது. மேலும் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவ்வப்போது இறைச்சிக் கழிவுகள், குப்பைகளை இந்த குளத்தில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்துறை சார்பாக ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. குளத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பி குளத்தைச் சுற்றிலும் நடைபாதை அமைத்து மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
தொடர்ந்து குளக்கரையில் பூங்கா, குழந்தைகள் விளையாட விளையாட்டு சாதனங்கள், பொதுமக்கள் நடை பயிற்சி செய்யும்போது ஆங்காங்கே அமர்ந்து செல்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் இந்த குளத்தை தற்போது பராமரித்து வரும் நிலையில் குளத்தில் ஆகாயத்தாமரையும், கோரை புற்களும் வளர்ந்து படர்ந்துள்ளன. ஆகாயத்தாமரை தண்ணீர் உறிஞ்சும் தன்மை உள்ளது என்பதால் கோடை காலம் நெருங்கி விட்ட நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக குளத்தை சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் கோரை புற்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post நல்ல தண்ணீர் குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரைகள் திருத்தணியில் நிலத்தடி நீர் பாதிப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.
