×

குறைந்த வட்டிக்கு நகை கடன் தருவதாக தொழிலதிபரிடம் 238 சவரன் மோசடி

போரூர், ஜன. 10: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். தொழிலதிபரான இவர், மவுலிவாக்கத்தில் தனியாக நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். தனது தொழில் வளர்ச்சிக்காக 1 கிலோ 899 கிராம் தங்க நகைகளை (238 சவரன்) வங்கியில் ரூ.1.2 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார். வங்கியில் அதிக வட்டி என்பதால் குறைந்த வட்டியில் நகைகளை அடமானம் வைக்க கணேஷ் முடிவு செய்தார். அதன்படி தெரிந்தவர்கள் உதவியுடன் டாக்டர் திருமூர்த்தி நகரில் உள்ள ஜிஎஸ்என் என்ற பெயரில் அடகுக்கடை நடத்தும் உரிமையாளர் சுரேந்தர் மற்றும் அடகுக்கடை இயக்குநர் காஜா மொய்தின் பஷித் உதவியை நாடியுள்ளார்.

அப்போது வங்கியில் உள்ள உங்கள் நகைகளை நாங்கள் மீட்டு எங்கள் நிறுவனத்தில் அடகு வைத்து கூடுதல் பணத்தை தருவதாக உறுதி அளித்துள்ளனர். அதன்படி வங்கியில் தொழிலதிபர் கணேஷ் அடகு வைத்த ஒரு கிலோ 899 கிராம் தங்க நகைகளை, தனியார் அடகு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் இயக்குநர் ஆகியோர் மீட்டு தங்களது நிறுவனத்தில் மீண்டும் 1.15 சதவீதம் வட்டிக்கு அடகு வைத்து கூடுதலாக ரூ.30 லட்சம் கணேஷூக்கு தருவதாக கூறினர். ஆனால் சொன்னப்படி கூடுதல் தொகை தராமல் ரூ.16 லட்சம் மட்டும் தந்துள்ளனர். மேலும், நகைகளுக்கான கமிஷன் தொகையாக ரூ.1.75 லட்சம் மற்றும் ரூ.75 ஆயிரம் சர்வீஸ் சார்ஜ் பிடித்து கொண்டு மீதமுள்ள பணத்தை கொடுத்துள்ளனர்.

ஆனால் சொன்னபடி ரூ.30 லட்சம் தராததால் தொழிலதிபர் உங்களுக்கான வட்டி மற்றும் அசல் பணத்தை முழுவதுமாக தந்து விடுவதாக கூறி அடகு வைத்த மொத்த நகைகளை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் தொழிலதிபரிடம் நகைகளை கொடுக்காமல் அடகு நிறுவன உரிமையாளர் மற்றும் இதன் இயக்குநர் ஏமாற்றி வந்துள்ளனர். அதைதொடர்ந்து தொழிலதிபர் கணேஷ் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, தொழிலதிபரை ஏமாற்றும் நோக்கில் வங்கியில் இருந்து ஒரு கிலோ 899 கிராம் தங்க நகைகளை மீட்டு தங்களது அடகு நிறுவனத்தில் வைத்து ஏமாற்றியது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் தொழிலதிபரின் நகைகளை ஏமாற்றிய சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தனியார் அடகு நிறுவன உரிமையாளர் சுரேந்தர் (37) மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குநரான சூளைமேடு பகுதியை சேர்நத் காஜா மொய்தீன் பஷித் (36) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் இடைத்தரகர்களாக இருந்த மற்றவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Porur ,Ganesh ,Nungambakkam ,Chennai ,Maulivakkam ,
× RELATED ஆவடி மாநகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை