×

கடந்த ஒரு மாத காலத்திற்குள் 1,300 இடங்களில் 350 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது: போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் தகவல்

பொன்னேரி: கடந்த ஒரு மாத காலத்திற்குள் 1,300 இடங்களில் 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பொன்னேரியில் நடந்த போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்துள்ளார். பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் போதைப் பொருட்கள் இல்லாத திருவள்ளூர், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரதாப் கூறுகையில், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக போதை பொருட்கள் இல்லா திருவள்ளூர் என்ற நிலையை மாணவர்களிடையே சென்றடைவதற்கு இங்கு வந்துள்ளோம். ஏனென்றால் மாணவர்களிடையே மனதில் மாறுதல் ஏற்பட்டால்தான் மாற்றம் உருவாகும் என்ற அடிப்படையில் உங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு ஏற்படுத்துவதன் மூலம் நீங்கள் ஒரு பத்து நபர்களுக்காவது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி மற்றும் கல்லூரி சுற்றியுள்ள 500 மீ தொலைவிற்கு போதை பொருட்கள் விற்பனையை தடை செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த கடை உரிமத்தை 30 நாட்களுக்கு ரத்து செய்து எச்சரிக்கை விடப்படும். இரண்டாவது தடவை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த கடையின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள 6 வாகன சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளோம். இந்த ஒரு மாத காலத்திற்குள் சுமார் 1,300 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு மேற்கொண்ட சோதனையில் 350 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் இல்லா திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்குவதற்கு மாணவர்களாகிய நீங்கள் ஒன்றிணைந்து ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என்றார்.

முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருட்கள் இல்லா திருவள்ளூர் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து போதைப் பொருட்கள் இல்லாத திருவள்ளூர் என்ற நிலையை உருவாக்க அமைக்கப்பட்ட நெடும்பலகையில் கையொப்பமிட்டனர். விழிப்புணர்வு கோலப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி, கலை நிகழ்ச்சியை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில், ஆவடி உதவி ஆணையர்கள் பொன் சங்கர் (மதுவிலக்கு பிரிவு), கல்லூரி முதல்வர், தில்லைநாயகி, தனித் துணை கலெக்டர் பாலமுருகன். பொன்னேரி வட்டாட்சியர் சிவக்குமார், செங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ், பொன்னேரி நகராட்சி ஆணையர் புஷ்ரா, மதுவிலக்கு அமல்பிரிவு தாசில்தார் சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கடந்த ஒரு மாத காலத்திற்குள் 1,300 இடங்களில் 350 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது: போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Prohibition and Excise Department ,Ulganatha Narayanasamy Government College ,Ponneri… ,Dinakaran ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...