×

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை: பொதுவெளியில் வரைமுறையுடன் பேச அறிவுறுத்தல்

சென்னை: முதல்வர் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பல்வேறு நிகழ்வுகளில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது சி.வி.சண்முகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், எதிர்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளது. அதனடிப்படையிலேயே மனுதாரர் பேசியுள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், விமர்சனம் என்ற பெயரில் மோசமான வார்த்தைகளை சி.வி.சண்முகம் பயன்படுத்துகிறார். நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அது போன்ற கருத்துகளை பேசுகிறார் என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டும். எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என்றாலும் கேலி உள்ளிட்டவை கூடாது. சி.வி.சண்முகம் தொடர்ச்சியாக ஏன் இப்படி பேசுகிறார்?. அனைத்துக்கும் ஒரு எல்லை உள்ளது. பொதுவெளியில் பேசும் போது வரைமுறையுடன் பேச வேண்டும். இதனையடுத்து, சி.வி.சண்முகம் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும். எதிர்காலத்தில் சிவி சண்முகம் இவ்வாறு பேசாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மீண்டும் அதனை மீறினால் வழக்கை சந்தித்து தான் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post முதல்வர் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை: பொதுவெளியில் வரைமுறையுடன் பேச அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : High Court ,CV Shanmugam ,Chennai ,Madras High Court ,Chief Minister ,Court ,Dinakaran ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...