×

ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்: கடந்த 10 நாளில் 10,000 கிலோ மீன்கள் இறந்ததால் அதிர்ச்சி

ஆவடி: ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கடந்த 10 நாட்களில் 10,000 கிலோ மீன்கள் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலநிலை மாற்றம், கழிவுநீர் கழப்பு போன்ற காரணங்களால் மீன்கள் செத்து மிதந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவடியில் 87.06 ஏக்கர் பரப்பளவு உடைய பருத்திப்பட்டு ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2019ல், நீர்வளத்துறை சார்பில் ரூ.28.16 கோடி மதிப்பில், இந்த ஏரி பசுமை பூங்காவாக மாற்றப்பட்டது. இதில் மூன்று கி.மீ., சுற்றளவு நடைபாதை, சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி கலையரங்கம், படகு குழாம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த ஏரியில் கழிவுநீரகற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆவடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து பாதாள சாக்கடை இணைப்பு வாயிலாக சேகரிக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு இந்த ஏரியில் விடப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3ம் தேதி, பருத்திப்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதாகவும், அதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், மீன்பிடி ஊழியர்கள் மூலம், நான்கு பரிசல் கொண்டு ஏரியில் செத்து மிதந்த 500 கிலோ எடையுள்ள சிறிய வகை ஜிலேபி மீன்களை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து, ஏரியைச் சுற்றி சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மின்வெட்டு ஏற்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்காதபோது, ஏரியில் கழிவுநீர் பாய்ந்து மீன்கள் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் கடந்த 10 நாட்களில் மீன்பிடி ஊழியர்கள் உதவியுடன், 10,000 கிலோ ஜிலேபி மீன்கள் பிடிக்கப்பட்டு சேக்காடு குப்பை கிடங்கு அருகில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன.

நோய் தொற்று பரவாமல் இருக்க, ஏரியைச் சுற்றி சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 8ம் தேதி மீன்வளத்துறை அதிகாரிகள் ஏரியில் ஆய்வு செய்தனர். காலநிலை மாற்றம், ஏரி நீரில் அமிலத்தன்மை, காரத்தன்மை சம நிலையில் இல்லாமை, நீரின் அளவை விட மீன்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சுவாசிக்க முடியாமை மற்றும் கழிவுநீர் கலப்பு உள்ளிட்டவையால் மீன்கள் இறந்திருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்தது.

The post ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்: கடந்த 10 நாளில் 10,000 கிலோ மீன்கள் இறந்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Avadi Pattipattu lake ,Avadi ,Pattipattu lake ,Avadi… ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்