வேப்பூர், மார்ச் 13: திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணிமுத்தாற்றில் வெள்ளத்தில் சிக்கி தவித்த திதி கொடுத்தவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வில்வனேஸ்வரர் கோயில் உள்ளது. மணிமுத்தாறு, கோமுகி, மயூரநதி ஆகிய மூன்று நதிகள் கூடும் இடத்தில் இக்கோயில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பிடித்தது.
அதனை போக்க முருகன் இந்த கோயிலில் வந்து சிவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம் உள்ளது. மாசிமக திருவிழாவை இங்கு காண்பவர்களுக்கு காசிக்கு போய் கிட்டும் புண்ணியம் கிடைப்பதாக நம்பிக்கை. இதனால் நல்லூர் ஆற்றில் மாசி மகத்திருவிழாவில் முன்னோர்களுக்கு அவரது உறவினர்கள் திதி கொடுப்பர். நேற்று மாசி மகத்தை முன்னிட்டு, நல்லூர் மணிமுத்தாற்றில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
அப்போது நேற்றுமுன்தினம் பெய்த மழையால் சுற்றுவட்டார பகுதி ஓடைகளில் இருந்து மணிமுத்தாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் பகல் 12.10 மணியளவில் வருவாய்த்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வருவாய் வட்டாட்சியர் மணிகண்டன் இதுகுறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து அப்புறப்படுத்த அறிவுறுத்தினார். இந்நிலையில் பொதுமக்கள் திதி கொடுத்து கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
சிறிது நேரத்தில் தண்ணீரின் அளவும் மளமளவென அதிகரித்தது. இதனால் திதிகொடுத்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பலர் அங்கிருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். ஆனால் சிலர் வெளியே வரமுடியாமல் வெள்ளத்தில் சிக்கித்தவித்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் சசிகலா, முதல் நிலை காவலர் தென்எழிலன் ஆகியோர் விரைவாக செயல்பட்டு ஆற்றில் திதி கொடுத்து கொண்டிருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற்றினர். இடுப்பளவு தண்ணீரில் சிக்கிய சிறுவர்கள், முதியவர்களை போலீசார் தென்எழிலன் தூக்கி வந்து பாதுகாப்பாக கரையேற்றினார். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தபோது துரிதமாக செயல்பட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
The post வேப்பூர் அருகே திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்மணிமுத்தாற்றில் திதி கொடுத்தவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு appeared first on Dinakaran.
