×

பெண்ணாடம் அருகே சோகம் பள்ளி வேன் மோதி பைக்கில் சென்ற தந்தை, மகன் பலி

விருத்தாசலம், டிச. 23: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே தி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஓவியர் மதியழகன்(45). இவரது மகன் மனோஜ் (25). இன்ஜினியரிங் முடித்த இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சியில் நடந்த காவலர் தேர்வு எழுத மனோஜ் சென்னையில் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து தேர்வு முடிந்து நேற்று காலை சென்னை செல்ல பெண்ணாடம் பேருந்து நிலையத்திற்கு தந்தையுடன் பைக்கில் சென்றார். பைக்கை அவரது தந்தை மதியழகன் ஓட்டி சென்றார். தி.அகரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே பெண்ணாடம் சோழநகரைச் சேர்ந்த பழனி மகன் வேல் (38) என்பவர் பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக ஓட்டி வந்த தனியார் பள்ளி வேன் திடீரென மதியழகன் பைக் மீது மோதிவிட்டு சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.

இதில் தந்தை, மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், காயமடைந்த மதியழகன், அவரது மகன் மனோஜ் ஆகியோரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தந்தை, மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் திரண்டு வந்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில் விருத்தாசலம் – திட்டக்குடி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது விபத்தை ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Virthasalam ,Cuddalore District Courthouse ,Kinnadam Thi ,Painter Madiyazhagan ,Akram village ,Manoj ,Chennai ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்த...