×

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனை தவிர யாருக்கும் தொடர்பு இல்லை: கமிஷனர் அருண் சொன்னதற்கு மேல் ஒன்றும் இல்லை என குற்றப்பத்திரிக்கையில் தகவல்

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனை தவிர யாருக்கும் தொடர்பில்லை என சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், மாணவியை மிரட்டும்போது செல்போனில் ஒருவரிடம் சார் என்று கூறி ஞானசேகரன் பேசியதாக, மாணவி வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து யார் இந்த சார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கின. அதிமுக, பாஜ தலைவர்கள் அந்த சாரை கைது செய்ய வேண்டும் என்றனர். ஆள் ஆளுக்கு அந்த சார், இவர்தான் என தங்கள் யூகத்துக்கு பேச ஆரம்பித்தனர். குறிப்பாக பாஜ தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் யார் அந்த சார் என கேள்வி எழுப்பி, வழக்கில் இன்னொரு நபருக்கு தொடர்பு உள்ளது அவரை கண்டுபிடிக்க வேண்டும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையர் அருண் இந்த சம்பவத்தின் போது குற்றவாளி தனிப்பட்ட முறையில் தான் செயல்ப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆணையர் பேட்டி கொடுக்கலாமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசின் அனுமதி இல்லாமல் எப்படி பேட்டி கொடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கேட்டது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு தற்போது இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையின் நகல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது ஆண் நண்பரும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு படிக்கட்டில் அமர்ந்து பேசிகொண்டு இருந்தனர். மாலை 7.10 மணியளவில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு தொப்பி அணிந்து முகத்தை மறைத்து, ஞானசேகரன் நுழைந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் தான் இருந்ததற்கான தடயத்தை மறைப்பதற்காக அவர் தனது செல்போனை பிளைட் மோடுக்கு மாற்றியுள்ளார். மாணவியின் நண்பரை தாக்கிய பின், அவர்களின் அடையாள அட்டையை பறித்துள்ளார். அதன்பின் இருவரையும் வீடியோ எடுத்து டீன், வார்டன் ஆகியோரிடம் காட்டப்போவதாக மிரட்டியுள்ளார்.

அப்போது இருவரும் கெஞ்சியதையடுத்து, மாணவரை அங்கிருந்து அனுப்பி விட்டு, மாணவியை தனியாக அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். மாணவி பெற்றோரின் அலைபேசி எண்களை பெற்றுக்கொண்டு, தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என கூறியுள்ளார். தனக்கு பல்கலைகழகத்தில் அதிகாரம் இருப்பது போன்று காண்பிப்பதற்காக, மாணவியை அச்சுறுத்துவதற்காக, ஞானசேகரன் செல்போனில் ‘சார்’ என அழைத்து ஒரு நபரிடம் பேசுவது போல் நடித்துள்ளார். உண்மையில் எதிர்புறம் யாரும் இல்லை. பல்கலை வளாகத்திற்குள் நுழைந்ததிலிருந்து அவர் தனது பைக்கில் புறப்படும் வரை அவரது மொபைல் போன் பிளைட்மோடில் இருந்தது. மேலும் மாணவியை வன்கொடுமை செய்த வீடியோவை போனில் மறைவான போல்டரில் வைத்துள்ளார், போலீசார் விசாரணைக்கு அழைத்த போது அதை டெலிட் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற போது சட்டமன்றத்தில் அமளி, பல்வேறு இடங்களில் போராட்டம் என தொடர்ந்து இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தினர். அதோடு மட்டுமின்றி சமுக வலைதளங்களில் அதிமுக மற்றும் பாஜ ஐடி விங்கை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தை, ‘யார் அந்த சார்?’ போன்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வது என தொடர்ந்து அரசுக்கு எதிராக அவதூறு பரப்பினர். தற்போது இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் வழக்கில் ஞானசேகரனை தவிர யாருக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் அதிமுக, பாஜவினர் யார் அந்த சார் என தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில் அப்படி எந்த சாரும் இல்லை என குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீஸ் கமிஷனர் அருண் கூறியதுதான் உண்மை என்று, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனை தவிர யாருக்கும் தொடர்பு இல்லை: கமிஷனர் அருண் சொன்னதற்கு மேல் ஒன்றும் இல்லை என குற்றப்பத்திரிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Gnanasekaran ,Commissioner ,Arun ,Chennai ,Special Investigation Team ,Guindy, Chennai ,Tamil Nadu.… ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...