×

ஜிப்மேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஜிப்மேட் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  நம்நாட்டில் புத்தகயா மற்றும் ஜம்மு நகரங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உட்பட ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர ஜிப்மேட் என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 26ம் தேதி மதியம் 3 முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 11ல் தொடங்கி மார்ச் 10ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் exams.nta.ac.in/JIPMAT என்ற வலைத்தளம் மூலம் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதுதவிர விண்ணப்பக் கட்டணத்தை மார்ச் 18ம் தேதி வரை செலுத்தலாம். அதைத்தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மார்ச் 19 முதல் 21-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர பாடத்திட்டம், கட்டணம், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது jipmat@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

The post ஜிப்மேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indian Institutes of Management ,IIMs ,Bodh Gaya ,Jammu ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்