×

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் மசோதா விவகாரம்; ஜனாதிபதி முர்முவுக்கு இந்திய கம்யூ., கண்டனம்

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநர்கள் மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில் போட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் தெரிவித்தது. கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த சென்னை பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவர், தற்போது தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.இது ஒன்றிய பாஜக அரசின் பாசிச இந்துத்துவா அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ஆளுநர்கள் மூலமாக பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில், அன்றாட செயல்பாடுகளில், பாடத்திட்டங்கள் வகுத்தலில், நேரடியாக ஒன்றிய அரசு தலையிடுகிறது. அதைச் செய்வதற்கு, பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த ஆதரவாளர்களை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறது. இது நாட்டின் மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானதாகும். ஆளுநர்கள் மூலமும், அவர்களின் தலையீட்டால் நியமனம் செய்யப்படும் துணைவேந்தர்கள் மூலமும், பிற்போக்கான தேசியக் கல்விக் கொள்கை – 2020 யை நடைமுறைப்படுத்திட ஒன்றிய அரசு முயல்கிறது. அதை ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழ்நாட்டில் செய்துவருகிறார்.

கல்வி நிறுவனங்களை காவிமயமாக்க வேண்டும் என்ற தனது அரசியல் உள்நோக்கத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்பதற்காகவே, சென்னை பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒன்றிய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தரவில்லை. தற்பொழுது அந்த மசோதா திருப்பி அனுப்பப் பட்டுள்ளது. கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இச்செயலுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Madras University ,CPI ,President ,Murmu ,Chennai ,State Secretary ,Veerapandian ,Supreme Court ,
× RELATED “இயற்கைத்தாயின் பெருமகன்” –...