சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்துவதற்கு ஆணையிட்டு அதற்காக ரூ.43.52 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான சர்வே மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாடு அரசு நடத்தவிருக்கும் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும், சாதிவாரி சர்வேவுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. நலத்திட்ட தாக்க அறிவிக்கைக்கான சர்வே தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி வீடுகளில் நடத்தப்பட வேண்டும். சாதிவாரி சர்வே என்பது அதைவிட சற்றுக் கூடுதலாக 2.26 கோடி வீடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்; ஆனால், சாதிவாரி சர்வேயை அனைத்து வீடுகளிலும் மேற்கொள்ளலாம். மொத்தத்தில் பணிச்சுமை, அலைச்சல் ஆகியவை சாதிவாரி சர்வேவுக்கும், நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும் ஒரே அளவிலானவை தான். இன்னும் கேட்டால் சாதிவாரி சர்வே நடத்தும் போது, அதில் எழுப்பப்படும் 70க்கும் மேற்பட்ட வினாக்களின் வாயிலாகவே நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்து விட முடியும் என்பதால், இதற்காக தனி சர்வே நடத்த வேண்டிய தேவை இருக்காது. நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதுபோலவே, சாதிவாரி சர்வேயை நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
