
*2 நாள் கணக்கெடுப்பு நிறைவு
ஓசூர் : ஓசூர் வனக்கோட்டத்தில், 2 நாட்கள் நடந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில், 200க்கும் அதிகமான பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டமானது காவிரி-சின்னாறு, தென்பெண்ணை மற்றும் தொட்டஹல்லா ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக அமைந்துள்ளது. ஓசூர் வனக்கோட்டத்தில், காவிரி வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயங்களில், பல்வேறு வகையான பறவை இனங்கள் மற்றும் வன உயிரினங்கள் வசித்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈரநிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, தளி ஏரி, கே.ஆர்.பி அணை, ஆவலப்பள்ளி அணை, பனை ஏரி உள்ளிட்ட 40 நீர்நிலைகளில், கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் காலை 6 மணி முதல் 11 மணி வரை, பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் அதிகமான வன அலுவலர்கள், வனப்பணியாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கணக்கெடுப்பு பணியில், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதிலும் இருபாலர்களும் கலந்து கொண்டனர். இவர்களை ஒருங்கிணைத்து, சம்மந்தப்பட்ட நீர்நிலைகளுக்கு சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வழிகாட்டுதலுக்கு ஏதுவாக, வாட்ஸ் ஆப் செயலி உருவாக்கப்பட்டு வழி நடத்தப்பட்டது.
ஒவ்வொரு நீர்நிலையிலும் கணக்கெடுக்கும் குழுவில், வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் பறவைகள் பற்றி முன் அனுபவம் உள்ள நிபுணர்கள் கலந்து கொண்டு, பல்வேறு வகையான பறவை இனங்களை கண்டறிந்து பதிவு செய்யப்பட்டது.
கணக்கெடுப்பு பணியின் போது, தொலைநோக்கி கருவி, கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி, பாம்புண்ணி கழுகு, சிறிய கரும்பருந்து, சிறிய காட்டுஆந்தை, செந்நாரை, மீன்கொத்திகள், சுடலை குயில் மற்றும் மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட 200க்கும் அதிகமான பறவை இனங்களை அடையாளம் கண்டு உரிய படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஒசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் கூறியதாவது:எனது தலைமையில், உதவி வனப்பாதுகாவலர் (தலைமையிடம்) யஸ்வந்த் ஜெக்தீஷ் அம்புல்கர் ஒருங்கிணைப்புடன், ஓசூர் கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன், பறவைகள் கணக்கெடுப்பு பணி நல்ல முறையில் நடைபெற்றது. இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் வனத்துறையின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ஈர நிலங்களில் நடைபெற்ற இந்த பறவைகள் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் காலை 6 மணி முதல் 11 மணி வரை ஒருங்கிணைந்த நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பு பெரும்பாலும் காப்புக்காடுகளில் நடைபெறும். இக்கணக்கெடுப்பு ஓசூர் கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன், பல்வேறு துறைகளில் பணியாற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும்.
பறவைகள் கணக்கெடுப்பில் விருப்பம் உள்ள தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கணக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ஓசூர் வனக்கோட்டத்தில் 200க்கும் அதிகமான பறவை இனங்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.
