ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகுமாரன் (35). இவருக்கு, வித்யா(30) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பாலகுமாரனின் மனைவி வித்தியா, துணிகளை உலர்த்துவதற்காக தனது 2வது மகளான இரண்டரை வயதுடைய ஆருத்ராவுடன் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடிக்கு சென்றார்.
அப்போது, மாடிப் படிக்கட்டில் பக்கவாட்டு கம்பி வழியே குழந்தை ஆருத்ரா தவறி கீழே விழுந்துள்ளது. வித்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த ஆருத்ராவை மீட்டு முடிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆருத்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை ரிலா பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கிசிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மாடி கைப்பிடி கம்பி வழியே தவறி விழுந்து பெண் குழந்தை பலி appeared first on Dinakaran.
