×

சென்னை ஜார்ஜ் டவுனில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகம் திறப்பு: அமைச்சர்கள் மூர்த்தி, சேகர்பாபு திறந்து வைத்தனர்

சென்னை: ஜார்ஜ்டவுனில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகத்தை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னை, ஜார்ஜ் டவுனில் பதிவுத்துறையின் வரலாற்றை சிறப்பிக்கும் விதமாக, புனரமைக்கபட்ட புராதான கட்டிடத்தில் செயல்பட உள்ள பதிவுத்துறையின் சென்னை வடக்கு மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) எண் 1 இணை சார்பதிவாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் (களப்பணி) அலுவலகங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். குறிப்பாக பதிவுத்துறைக்கு சொந்தமான 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதான கட்டிடம் சென்னை ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது.

இந்த கட்டிடம் 1864ம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டிடக்கலை நயத்துடன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்கது. இப்புராதான கட்டிடம் மெட்ராஸ் நாட்டு தளக்கூரை, பின்பகுதி மங்களுர் ஓட்டு கூரை மற்றும் தேக்கு மர உத்திரங்களால் ஆன 24,908 சதுரடி பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது. மேலும், பல ஆண்டுகள் கழித்து, வலுவிழந்த நிலையில் காணப்பட்ட இந்த புராதான கட்டிடத்தை பழமை மாறாமல் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புனரமைப்பு செய்ய அரசு முன்னுரிமை வழங்கி ரூ.9.85 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த், பத்திரப்பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை ஜார்ஜ் டவுனில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகம் திறப்பு: அமைச்சர்கள் மூர்த்தி, சேகர்பாபு திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ministers ,Murthy ,Shekarbabu ,Registration Department ,George Town, Chennai ,Chennai North District Office of the Registration Department ,Chennai George Town ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...